முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிஜாம் அரண்மனைக்கு மாறும் சந்திர சேகரராவின் அலுவலகம்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஆக.27 - ஐதராபாத்தில் நிஜாம் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை தற்போது தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் அலுலவகமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.20 கோடியில் மராமத்து பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின்பு, இரு மாநிலங்களுக்கும் தலைவராக ஐதராபாத்தில் அமைந்திருக்கும் சைபாபாத் அரண்மனை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஐதராபாத்தை ஆட்சி செய்த மன்னர் நிஜாம் காலத்தில் கலை வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் நிஜாம் அரசு செயல்பட்டு வந்துள்ளது.  கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த அரண்மனை பயன்பாடற்று பாழடைந்து கிடக்கிறது. தலைமைச் செயலகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இதன் அருகில் தான் ஊழியர்களின் வாகன நிறுத்தம் உள்ளது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் ஏராளமான சேதங்கள் ஏற்படும் என ஊழியர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2008 ம் ஆண்டு இந்த கட்டிடத்தை மராமத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆய்வு செய்யப்பட்ட போது மராமத்து செய்ய ரூ.8 கோடி நிதி தேவைப்படும் என அப்போது அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது தெலுங்கானாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திர சேகரராவ், நிஜாம் காலத்து பாரம்பரிய கட்டிடங்கள் மீது விருப்பம் உடையவராக உள்ளார். தெலுங்கானாவின் முதல் சுதந்திர தின கொடியேற்றத்தை கோல்கொண்டாவில் அமைந்துள்ள கோட்டையில் நடத்தினார். அதே போல், தற்போது தனது அலுவலகத்தை இந்த சைபாபாத் அரண்மனையில் அமைக்க விரும்புகிறார். மேலும் பாரம்பரிய பகுதிகளான சுல்தான் பஜார், மொசாம்ஜாகி மார்க்கெட் வழியாக செல்ல உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் தடத்தை வேறு பாதையில் மாற்றி விடுவது குறித்தும் சந்திரசேகரராவ் தீவிரம் காட்டி வருகிறார்.

தற்போது சைபாபாத் அரண்மனையை மராமத்து செய்து முதல்வர் அலுவலகமாக மாற்ற சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளார். மராமத்து பணிக்கு ரூ.20 கோடி தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த அரண்மனை அழகிய கலை வேலைப்பாடுகளுடன், ஐரோப்பிய முறையிலான வளைந்த நுழைவு வாயிலுடனும் காணப்படுகிறது. தற்போது மாடிப்படிகளை கலைநயத்துடன் செய்து அங்கு லிப்ட் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்