திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கலெக்டர் மு.கருணாகரன் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருநெல்வேலி
nellai pongal

 

திருநெல்வேலி.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க விழா, கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில், சங்கரன்கோவில், காந்திநகரில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மு.கருணாகரன், 100 நபர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.பின்னர், கலெக்டர் பேசியதாவது-

 

ஏழை, எளிய மற்றும் நடுத்தர பொதுமக்கள் பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தமிழக அளவில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் சென்னையில் இன்று துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1454 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கூட்டுறவுத் துறையின் மூலும் 807 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 375 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், ஆக மொத்தம் 1182 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2017ன்படி, அரிசி பெறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.110/- மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 7,94,023 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,57,31,035/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சங்கரன்கோவில், கழுகுமலை ரோடு (27ஊஊ004ஞலு) நியாயவிலைக் கடையில் 1,124 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் ரூ.3 கோடி செலவில் 10 இடங்களில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.14.25 கோடி செலவில் 59 கண்மாய்கள் இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்களின் பாசன பரப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் உயரும். திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவரையும் வாழ்த்துகிறேன் என கலெக்டர் மு.கருணாகரன், பேசினார்கள்.

 

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவர் செல்வி பெர்மிவித்யா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, ஆவின் நிறுவனத் தலைவர் ரமேஷ், சங்கரன்கோவில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வேலுசாமி, சௌந்தர் என்ற சாகுல்ஹமீது, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) அ.ரியாஜ்அகமது, சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.சுடலைமுத்துபாண்டியன், குடிமைப் பொருள் வட்டாட்சியர் சுப்புராயன், சங்கரன்கோவில் கூட்டுறவு சார் பதிவாளர் (பொ.வி.தி) சக்திவேல், அக்ரோ மாவட்ட துணைத் தலைவர் சண்முகையா, குடிமைப் பொருள் வழங்க வருவாய் ஆய்வாளர் பெருமாள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: