ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளர்கள். அதன்படி, ஓகிப்புயலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை நிவாரணப்பணிகள் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் கலெக்டர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று நேரில் வழங்கினர்.
மீனவர்களுக்கு சிகிச்சை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்டு, கடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள் முட்டத்தை சேர்ந்த ஜான்சன்(வயது-52), நீரோடியை சேர்ந்த முத்தப்பன்(வயது-26), பூஸ்டர் பாய் (வயது-44), மேலமுட்டத்தை சேர்ந்த சேவியர்;(வயது-30) ஆகிய 4 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், காயமடைந்த மீனவர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தகவல் தொழில் நுட்பத்துறை முதன்மைச் செயலாளருமான டி.கே.ராமச்சந்திரன், கூடுதல் கண்காணிப்பு அலுவலரும் தொழில்துறை முதன்மைச் செயலாளருமான முனைவர்.ராஜேந்திரகுமார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி,, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமி, மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன்சிங் ரா. சவான். ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தமிழ்நாடு அரசின் நிவாரண உதவித்தொகையாக 4 மீனவர்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.