காலையில் சிறையிலிருந்து விடுதலையான பைக் திருடன், பைக் திருடிவிட்டு தப்பியபோது மீண்டும் கைது

10 bike news

சிவகங்கை.- புதுக்கோட்டை சிறையில் இருந்து காலையில் விடுதலையான திருடன் மாலையில் பைக் திருடிவிட்டு தப்பியபோது மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி மும்மூர்த்தி கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அது பழுதானதுபோல் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அருகில் நின்றிருந்த ஒரு மொபட்டின் பூட்டை உடைத்து அதை திருடிச் சென்றனர். இதை பார்த்து விட்ட அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று இருவரையும் பிடித்தனர்.
மதகுபட்டி எஸ்.ஐ., ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார் விசாரித்தனர். அதில் ஒருவர், புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராமன், 38.
இவர் மீது வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய வழக்குகள் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளது. இவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் விடுதலையானார்.
சிறை நட்பால் திருட்டு
மற்றொருவர் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன், 48. இவரும், திருட்டு வழக்கில் கைதாகி, புதுக்கோட்டை சிறையில் இருந்துள்ளார்.
அங்கு இவரும், முத்துராமனும் நண்பர்களாகினர். 3 வருடம் சிறை தண்டனையை அனுபவித்து விட்டு மணிகண்டன் நேற்று முன்தினம் காலையில் தான் விடுதலையானார். வெளியே வந்ததும், நண்பர் முத்துராமனை அலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தித்துள்ளார்.
பின்னர், தனது பிறந்த ஊரான மறவமங்கலத்திற்கு செல்ல மணிகண்டன் முடிவு செய்தார். இதற்காக அவர் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு, அதில் முத்துராமனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். வழியில் மதகுபட்டி வந்தபோது பழுதாகிவிட்ட மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மொபட்டை திருடிச்சென்றபோது போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து மொபட் உரிமையாரான மதகுபட்டி கீழத்தெருவைச் சேர்ந்த மாணிக்கம்,55, கொடுத்த புகார்படி, இருவரையும் கைது செய்து திருடி மோட்டார் சைக்கிள், மொபட்டை மீட்டனர். கைதான இருவரும் சிவகங்கை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து