நாளை சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. - மும்பை இந்தியன்ஸ் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மும்முரம்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2019      விளையாட்டு
Dhoni 2019 04 12

சென்னை, : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் குவிந்த நிலையில் நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

நாளை மீண்டும்...

சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில் 2-வது முறை மோதும் இந்தப் போட்டியில் சென்னை அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட வரிசையில்....

எனவே ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் விற்கப்படும் நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அடிப்படை வசதிகளோ செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

சீரமைக்கப்படவில்லை...

போதிய போலீசார் நிறுத்தப்படவில்லை என்றும் முதன் முதலில் ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கிய போது அமைக்கப்பட்டு தற்போது சேதம் அடைந்த நிலையில் உள்ள தடுப்புகள் சீரமைக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் ஒரே ஒரு கவுண்ட்டரில் மட்டும் டிக்கெட் விற்பனை நடைபெறும் நிலையில் குறுகலான சூழலை ஏற்படுத்திய தடுப்புகளை தகர்த்தெறிந்துவிட்டு ரசிகர்கள் முண்டியடித்து முன்னேறினர்.

போலீசார் தடியடி...

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நெருக்கியடித்ததால் பதற்றமும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டதையடுத்து ரசிகர்களை போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். போதிய அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து