வரும் 23 - ம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம்: மாவட்ட பதிவாளர் உத்தரவு

புதன்கிழமை, 19 ஜூன் 2019      சினிமா
actor association election 2019 06 19

சென்னை : நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐகோர்ட் மறுப்பு...

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்விரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக கூறியது. மேலும், மாற்று இடங்களை பரிசீலித்து தெரிவிக்க நடிகர் சங்கத்துக்கு உத்தரவிட்டது.

தடை உத்தரவு...

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2017 - 18 உறுப்பினர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்கத்தில் முறைகேடாக நீக்கப்பட்டதாக 61 பேர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரிவான விசாரணைக்குப் பின்னரே இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் மாவட்ட பதிவாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு

இதற்கிடையே நடிகர் சங்க தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில்,  தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து