ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 27 ஆயிரம் ரூபாயை நெருங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க பெடரல் வட்டி விகித முடிவு, அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப்போர் காரணமாக தங்கள் விலையில் திடீர் மாற்றங்கள் இருந்தன. தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 208 குறைந்தது. இந்நிலையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 496 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ. 62 அதிகரித்து ரூ.3,372 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதன் மூலம் ஆபரணத் தங்கம் சவரன் ரூ. 26, 976 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 29 டாலர்கள் உயர்ந்ததை அடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்தது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத தங்கத்தின் தேவை உலக அளவில் உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணமாகும். 2019-ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் தங்கத்தின் தேவை 2,187 டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 8 சதவீதமாக அதிகமாகும். சென்னையில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் கூடியருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 44 ரூபாய் 30 காசுகளாக உள்ளது.