முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு சீசனுக்கு தயாராகும் காளைகள்:

செவ்வாய்க்கிழமை, 7 ஜனவரி 2020      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு சீசன் விரைவில் துவங்கவுள்ள நிலையில் சீறிப்பாய்ந்திட காத்திருக்கும் காளைகளுக்கு தற்போது சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய மிக்க வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு சீசன் விரைவில் துவங்கவுள்ளது.இந்நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம்,பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்றிடும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளையர்களை தூக்கி வீசியடித்து வெற்றி பெற்றிடும் காளைகளை தயார் செய்திடும் பணிகளில் காளைகள் வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி வீரம் விளைந்த மதுரை மண்ணில் காளைகள் நின்று விளையாடிடும் வகையில் காளைகளுக்கு பல்வேறு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.அதற்காக காளைகளை அருகிலுள்ள நீர்நிலைகளில் நீந்த வைத்தும்,குவித்த வைத்த மண்ணினை எதிராளியாக நினைத்து குத்தி எறிந்திட வைத்தும் உணர்ச்சிபூர்வமான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.பின்னர் வாடிவாசலில் அச்சமின்றி வெளியேறி வீரர்களை கோபத்துடன் துவம்சம் செய்வது பற்றியும்,காளைகளின் மனநிலையை ஒருமுகப்படுத்தியும் சிறப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு உயர்தர சத்து நிறைந்த தானிய உணவு வகைகள்,பருத்தி விதைகள்,முந்திரி,பேரீச்சை உள்ளிட்ட பல்வேறு சத்தான உணவுகள் நேரத்திற்கு நேரம் வழங்கப்படுகிறது.மேலும் ஊட்டச்சத்து நிறைந்த திரவ உணவுகளும் முறையாக கொடுக்கப்படுகிறது.மேலும் சத்தான உணவு கொடுக்கப்படுவதற்கு இணையான பயிற்சியும் காலை,மாலை என இருவேளைகளிலும் காளைகளுக்கு கொடுக்கப்படுகிறது.இது குறித்து ஏராளமான காளைகளை வளர்த்து ஜல்லிக்கட்டிற்கு தயார் செய்திடும் அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் கூறுகையில்: காளையை எங்களது குழந்தையை போல் நினைத்து வளர்த்து வருகிறோம்.ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் காளைகள் வெற்றி பெற்றி வரும் போது எங்களது குழந்தை ஜெயித்து வருவதாகவே நினைக்கிறோம்.அதற்காக அதன் பசியறிந்து அதற்கு என்ன தேவை என்பதையறிந்து ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் கொடுத்து வருகிறோம்.அதே போல் காளைகளுக்கு சிறப்பான பயிற்சிகள் கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் நின்று விளையாடிடும் வகையில் தமிழர் பாரம்பரியம் மாறிடாமல் தயார் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு சீசன் துவங்குவதற்கு முன்னதாக காளைகளை தயார் படுத்தும் பணிகளில் காளை வளர்ப்போர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூரில் பாய்ச்சல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழர்களின் வீரவிளையாட்டுக்களில் ஒன்றான இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண்பதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது மதுரையில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து