முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் ரஷ்ய சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு முதல்வர் எடப்பாடி நன்றி

திங்கட்கிழமை, 27 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் இருதய செயலிழப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல்முறையாக Pediatric அறுவை சிகிச்சை முறையான Biventricular Berlin Heart Implantation அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த MGM Healthcare மருத்துவமனையின் மருத்துவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது, 

 

உலகில் முன்னேறிய நாடுகளில் ஒன்றான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவன் இருதய செயலிழப்பு பிரச்சினையினால் அவதிப்பட்டு வந்ததால், அச்சிறுவனுக்கு  மிகவும் சிக்கலான Pediatric இருதய அறுவை சிகிச்சை முறையான Berlin Heart pump ventricular support  சிகிச்சையை அளித்து தமிழ்நாட்டின் பெருமையை உலக சுகாதார வரைபடத்திற்கு கொண்டு சென்ற MGM Healthcare மருத்துவமனைக்கு முதலில் எனது மனமார்ந்த பாட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இருதய அறுவை சிகிச்சை தெற்கு ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய பகுதிகளில் முதன் முறையாக, MGM Healthcare மருத்துவமனையில் பணியாற்றும் இந்திய மருத்துவர்களால் செய்யப்பட்டது என்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுவன் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

உயிரை பாடுபட்டு காப்பாற்றும் மருத்துவர்களை தெய்வத்திற்கு இணையாக மக்கள் போற்றுகின்றார்கள். உலகமே கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், உலகமே தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்கின்ற வகையில், இந்த அறுவை சிகிச்சையை அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு செய்து சாதனை படைத்த MGM Healthcare மருத்துவமனையையும், இதற்காக பணியாற்றிய மருத்துவர்களையும் நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.

தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவ தலைநகரம் என்று அனைவராலும் அழைக்கப்படுவதற்கு இந்த நிகழ்வு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.    சமுதாயத்தில் அனைத்து கட்ட வளர்ச்சிக்கும் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகும். சமூகப் பொருளாதார பின்னணி எதுவாக இருந்தாலும் அதனை கருத்தில் கொள்ளாமல், மாநிலத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை தொடர்பான திறன்மிகு நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவை கிடைத்திட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதே அம்மா அரசின் நோக்கமாகும்.

உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. இதன் காரணமாகத்தான், கொரோனா தொற்று நோய் பரவும்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவாக உரிய சிகிச்சை வழங்கி, உயிரிழப்பு ஏற்படுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, கொரோனா நோய் தாக்கத்திலிருந்து மக்களை மீட்க எது சரியான பாதையோ அதை தேர்ந்தெடுத்து சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமுமின்றி நேர்மையுடனும், உண்மையுடனும் இந்த அரசு எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது நோயினால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, இந்த நோயினுடைய பாதிப்பு தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.

மேலும், உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இந்த நோயினால் இறப்பவர்களின் சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.  தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து தரமான மருத்துவ சேவைகளை வழங்கி வருவதால், இன்றைக்கு வெளி மாநிலத்திலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் தரமான மருத்துவ சிகிச்சை குறைந்த செலவில் பெறுவதற்கு, அதிக எண்ணிக்கையில் மக்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

இதன் காரணமாக, தமிழ்நாடு, இந்தியாவின் மருத்துவச் சுற்றுலாத் தலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டு மருத்துவர்கள், MGM Healthcare மருத்துவமனை மருத்துவர்கள் நிகழ்த்தியதைப் போல மருத்துவ சிகிச்சை முறையில் பல புதிய சாதனைகளை படைத்து, தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை உலகிற்கு மீண்டும், மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்று அன்போடு மருத்துவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது உலகளாவிய சாதனையை நிகழ்த்தியிருக்கும் MGM Healthcare மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து