விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அமல்படுத்தாது: அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Kamaraj 2020 09 20

Source: provided

திருவாரூர் : விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தாது என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு மானிய நிதி வழங்குதல் மற்றும் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 9 பேருக்கு ரூ. 14 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் 4 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையையும் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அமல்படுத்தாது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றாமல் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பாராளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

இதில் ஒப்பந்த பண்ணைய திட்டம் என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் ஜனாதிபதி ஒப்புதலோடு மசோதாவாக நிறைவேறியுள்ளது.

வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்துதல் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டம். இதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம் என்ற நிலை நடைமுறையில் உள்ளது.

உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை தேக்கிவைத்து விவசாயிகள் சற்று கூடுதல் விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம் என்கிற மசோதாவும் நிறைவேறியுள்ளது.   

விவசாயிகளுக்கு எதிராக வணிகர்கள் விலை உயர்வை ஏற்படுத்தினால் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், கழிவறைகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

புகார்கள் மீது குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்து இருக்கும்பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து