அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      இந்தியா
modi 2020 09 25

Source: provided

புதுடெல்லி : விவசாயிகளிடம் தொடர்ந்து பொய்களைக் கூறுபவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்காக தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானது, குறைந்தபட்ச ஆதார விலையை அழித்து விடும், கார்ப்பரேட்டுகளிடம் அடிமைகளாக்கி விடும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மசோதா, விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டது என்று மத்திய அரசு கூறி வருகிறது. 

இந்த சூழலில் பிரதமர் மோடி, நேற்று பா.ஜ.க.வின் முன்னோடி சிந்தனையாளர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிகழ்சியில் தொண்டர்கள் மத்தியில் காணொலியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதாக்களும் விவசாயிகளின் நலன் சார்ந்தவை, வேளாண் துறையில் சீர்திருத்தங்களைச் செய்ய கொண்டு வரப்பட்டவை. இந்த சீர்திருத்தங்கள் மூலம் 85 சதவீதம் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

தங்கள் விளை பொருட்களை மண்டிகளைத் தவிர்த்து பல்வேறு இடங்களிலும் சுதந்திரமாக நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும்.  இந்த மசோதாவின் பலன்களையும், நன்மைகளையும், யாருக்கு அதிகாரம் கிடைக்கும் என்பதையும் பா.ஜ.க. தொண்டர்கள் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். 

சுதந்திரம் பெற்றதிலிருந்து வெற்று கோஷங்களை மட்டுமே சிலர் விவசாயிகளுக்கும், தொழிலாளர்ளுக்கும் ஆதரவாக பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். விவசாயிகளின் பெயரைக் கூறித்தான் மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் அரசுகளை அமைத்தார்கள். அனைத்து விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் குழப்பமான வாக்குறுதிகளையும், சட்டங்களையுமே கொண்டு வந்தார்கள். 

விவசாயிகளிடம் எப்போதும் பொய்களைக் கூறுபவர்கள் அவர்களுக்கு பின்னால் மறைந்து கொண்டு, எந்த விளைவுகளையும் சந்திக்காமல், விவசாயிகளை தூண்டி விடுகிறார்கள். 

மத்திய அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டங்கள் மூலம் அமைப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 கோடிபேர் உரியநேரத்தில் ஊதியம் பெற முடியும். தேவையில்லாதவர்களின் வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.

சமூகத்தில் விளிம்புநிலை மக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் வளங்களை அதிகமாக அரசு பயன்படுத்த வேண்டும்.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து