முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி. ஆடுவதும் சந்தேகமே ?

சனிக்கிழமை, 18 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அடுத்த மாதம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்களது முடிவை 48 மணி நேரத்திற்குள் ஆலோசித்து பின்னர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தொடரில் விளையாட கடைசி நிமிடங்களில் மறுப்பு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் வீரர்களும், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் கடும் ஏமாற்றமடைந்தனர். 

தற்போதைய சூழலில் பாகிஸ்தானில் உள்ள தங்கள் பாதுகாப்பு தொடர்பு அதிகாரிகளிடம் சூழல் குறித்து கலந்தாலோசித்து வருவதாகவும், அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் திட்டம் குறித்து பின்னர் அறிவிப்பதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

____________

முகாமில் இணைந்தார் கோலி

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து துபாய் திரும்பிய கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் படி ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். அந்த ஆறு நாட்கள் நிறைவடைந்தவுடன் ஆர்.சி.பி.யில் அவர் இணைந்துள்ளார். அவருடன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மற்றொரு ஆர்.சி.பி வீரர் முகமது சிராஜூம் அணியில் இணைந்துள்ளார்.  

நடப்பு சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் அணி. முதல் முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் பெங்களூர் வீரர்கள் இந்த சீசனை அணுகி உள்ளனர். மேலும் பெங்களூர் அணி நீல நிறத்திலான புதிய ஜெர்ஸியில் களம் இறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிகப்பு மற்றும் பச்சை நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து அந்த அணி விளையாடி உள்ளது. 

_____________

எல்லாம் மாறும்: ஷம்சி

ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5-வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது பற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி கூறியதாவது:- ஓர் அணி முதலிடத்தில் உள்ளதோ, 5-வது இடத்தில் உள்ளதோ, போட்டியின் முதல் பாதியில் எப்படி விளையாடியது என்பது முக்கியமில்லை. 

2-ம் பாதியில் எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாமும் மாறும். நாங்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ள ஓர் அணி நன்றாக விளையாடும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். அணி வீரர்களுடன் நன்குப் பழகி அந்த மகிழ்ச்சியையும் நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வர முயற்சி செய்வேன் என்றார்.  ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் 7 ஆட்டங்களில் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான் அணி. 

__________

மும்பை அணியில் டெண்டுல்கர்

மும்பை அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர், அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார். ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு 2013 முதல் மும்பை அணியின் ஆலோசகராக சச்சின் பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சச்சின் செல்லவில்லை. இந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்தியாவில் ஐபிஎல் நடைபெற்றபோதும் அவர் மும்பை அணியில் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை அணியினருடன் சச்சின் மீண்டும் இணைந்துள்ளார். 6 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அணி வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் சச்சின் பகிர்ந்துள்ளார். மும்பை அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் இடம்பெற்றுள்ளார். 7 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

_____________

இன்று ஆடுவாரா டூப்ளசிஸ் ?

அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மும்பை அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான டூப்ளசிஸ், மும்பைக்கு எதிரான போட்டியில் களம் காண்பாரா என்பது சந்தேகமாகி உள்ளது. 

இந்நிலையில் அவர் விளையாடுவாரா என்பது குறித்த விளக்கத்தை கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன். “தற்போது அவர் குவாரன்டைனில் உள்ளார். அது முடிந்ததும் அவரது உடல் திறன் பரிசோதித்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும். இருதாலும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இப்போதைக்கு இது குறித்து கவலை ஏதும் கொள்ள தேவையில்லை” என அவர் சொல்லியுள்ளதாக இன்ஸைட் ஸ்போர்ட் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து