முக்கிய செய்திகள்

செவ்வாய் கிரகத்தின் சத்தம்: பதிவு செய்த நாசா விண்கலம்

nasa--2021-10-21

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் ரோவர் கருவியில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிவாங்கி (மைக்ரோஃபோன்) மூலம் செவ்வாய் கிரகத்தில் பதிவு செய்யப்பட்ட சத்தங்களை ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் பூமிக்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 5 மணி நேரத்திற்கும் மேலான சத்தங்களை பதிவு செய்து வைத்திருப்பதாகவும், இவை அனைத்தும் அடுத்த கட்ட ஆய்விற்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான்: வாகனம்  கவிழ்ந்ததில் 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று விழுந்ததில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கே படக்ஷான் மாகாணத்தில் வாகனம் ஒன்றில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் யப்தல் இ பயன் என்ற மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்த வாகனம் பைசாபாத் நகரில் பள்ளத்தாக்கு ஒன்றில் திடீரென கவிழ்ந்துள்ளது.  இதில், 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.  டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்து உள்ளனர்.  இந்த விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் தீ விபத்து:  3 பேர் பலி - பலர் காயம்

சீனாவின் லியான்னிங் மாகாணத்தில் வடக்குப் பகுதியில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ லியான்னிங் மாகாணத்தில் வடக்குப் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் வியாழக்கிழமை கேஸ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்தனர். 

பல மணி நேர போராட்டத்திற்கு மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பன்றியின் சிறுநீரகத்தை  மனிதனுக்கு மாற்றி சாதனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் மரபணு ரீதியாக ஒழுங்குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை பரிசோதனை முயற்சியாக மனித உடலுக்கு மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். முதன்முறையாக பன்றி ஒன்றின் சிறுநீரகம், மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எந்தவித எதிர்ப்பையும் ஆற்றவில்லை என இந்த சோதனையை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது அடுத்த கட்ட சோதனையில் வெற்றி பெற்றால் மனித உறுப்புகளின் பற்றாக்குறையை போக்குவதற்கு இந்த சோதனை நிச்சயம் உதவும் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சிகிச்சை மூளை செயல்பாடு செயலிழந்துள்ள நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகின் இந்த பரிசோதனை புதியதொரு புரட்சியாக பார்க்கப்படுகிறது. 

ஈரானில் அடக்குமுறையால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

மற்ற இஸ்லாமிய நாடுகளை போன்றே, ஈரான் நாட்டிலும் சில பிற்போக்குதனமான விதிகள் பின்பற்றப்பட்டுவருகிறது. அதன்படி, முகத்தை மூடும்படியான உடையை அணிய வேண்டும் என்பது அங்கு விதியாக உள்ளது. அப்படி உடை அணியாத பெண்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பொதுவெளியில் முகத்தை மூடும்படியான உடையை அணியாத பெண் ஒருவரை நாயைப் பிடிக்கும் கருவியைக் கொண்டு கலாசார காவலர்கள் கைது செய்யும் விடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் சரியாக எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை.  கடந்த வாரம் நடந்தாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் விடியோவை ஈரான் நாட்டின் பெண் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாசிஹ் அலினேஜாத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

ஜப்பான்: உசோமினியாவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் உசோமினியா பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து  380 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நேபாளத்தில் வெள்ளம்:  பலி எண்ணிக்கை உயர்வு

நேபாளத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 77 பேர் பலியாகியுள்ளதாகவும் 26 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நேபாள அரசு காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் இதுவரை 22 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து