முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்டத்தில் ரூ. 51 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்தில் ரூ. 51 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில்  முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ. 49 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67,831 பயனாளிகளுக்கு 219 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.  

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 41 கோடியே 24  லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள 6 தளங்களைக் கொண்ட கல்வியியல் கூடம் மற்றும் 5 தளங்களை கொண்ட குடியிருப்புக் கட்டிடம்,  மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 5 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ள  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடம்,  நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் ரூ. 2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, வரவேற்பு அறை மற்றும் இதர கட்டிடங்கள்,

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள், நூலகங்கள், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ரூ. 29 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் பாப்பாப்பட்டி, கருப்பட்டி, அரசப்பட்டி ஆகிய பஞ்சாயத்திற்குட்பட்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் என மொத்தம் ரூ. 51 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில்  முடிவுற்ற  திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். 

மேலும் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 16 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் கட்டப்படவுள்ள  நகர பொது நல ஆய்வகங்கள் மற்றும் 62 நகர்ப்புர நல மற்றும் நோய் எதிர்ப்பு மையங்கள்,  மதுரை மாநகராட்சி அலுவலகம் தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அறிஞர் அண்ணா மாளிகை புதுப்பிக்கும் பணி மற்றும் மதுரை காந்தி மியூசியம் அருகில் ரூ.  2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகக் கட்டிடம்,  நமக்கு நாமே திட்டத்தின் கீழ்,  மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சலவைக் கூடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடம், 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தோப்பூரில் அமைந்துள்ள தொழுநோய்க்கான அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தொற்று நோய்க்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் சிறப்பு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனையில் ரூ. 9 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த கட்டிடம், சமயநல்லூரில் அமைந்துள்ள ANM பயிற்சி பள்ளியில் ரூ. ஒரு கோடியே 75 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தங்கும் விடுதிக் கட்டிடம்,

சமயநல்லூரில் அமைந்துள்ள சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி மைய இரண்டாவது தளத்தில் ரூ. ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் பயிற்சிக் கட்டிடம்,  சமயநல்லூரில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தில் ரூ. ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அவசர சிகிச்சைக்கான கட்டிடம்,

வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்கப் பணி; அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் என மொத்தம் ரூ. 49 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

மேலும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 67,831 பயனாளிகளுக்கு ரூ. 219 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் கே.என். நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காணொலிக் காட்சி வாயிலாக மதுரையிலிருந்து அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெங்கடேசன், மு.பூமிநாதன், கோ.தளபதி, மதுரை மாவட்ட கலெக்டர் மருத்துவர் எஸ்.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூர்யகலா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து