முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நம்பர் - 1 மாநிலம் தமிழகம் என்ற நிலை வரவேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்று சொல்லும் நிலை வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக தலைமை நிலையச் செயலாலரும், வீட்டுவசதி துறை வாரியத் தலைவருமான பூச்சி முருகனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தத் திருமணம் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருக்கிறது. என்ன கட்டுப்பாடு என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். கொரோனா என்கிற ஒரு தொற்று நோய் இன்றைக்கு நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நம்முடைய தமிழகத்தைப் பொருத்தவரையில் எந்த விதிமுறைகளை அதற்காக கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் அறிவுறுத்தி இருக்கிறோமோ, வலியுறுத்தி சொல்லி இருக்கிறோமோ அந்த கட்டுப்பாட்டிற்குள் நடக்கும் திருமணம் இந்த திருமணம். எனவே அரசினுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இந்த திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கும் பூச்சி முருகனை நான் நெஞ்சார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அதற்காக நான் நன்றி சொல்லவும் விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறபோது, இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் முதல்வர்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி, ஒப்பிட்டுச் சொல்லி, அதில் முதல் முதல்வராக - நம்பர்-1 முதல்வராக இன்றைக்கு ஸ்டாலின் இருக்கிறார் என்று பெருமையோடு சொன்னார்.என்னை பொறுத்தவரை நம்பர்-1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் தான் நீங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்தத் திருமணத்தைப் பொறுத்த வரைக்கும், இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக, தன்மானத்தோடு நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது.கொஞ்சம் நினைத்து பாருங்கள். 1967-க்கு முன்பு, இதுபோல சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் நடந்தால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1967-இல் முதல் முதலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று சட்டமன்றத்திற்குள் அண்ணா முதல்வராக நுழைந்து, முதல் தீர்மானமாக சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தார்கள்.எனவே இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்த சீர்த்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது.

கட்சியில் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய பூச்சி முருகனை சிலர் பூச்சி என்றும் கூப்பிடுகிறார்கள். நான் பெரும்பாலும் பூச்சி என்று கூப்பிடுவது இல்லை. முருகன், முருகன் என்று தான் கூப்பிடுவேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. துரைமுருகனை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து