முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச வர்த்தகத்தில் இந்திய வங்கிகளை முக்கிய அங்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      இந்தியா
modi-1-2021-12-16

Source: provided

புதுடெல்லி : சர்வதேச வர்த்தகத்தில்  இந்திய வங்கிகள் மற்றும் நாணயத்தை முக்கிய அங்கமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்பு வார கொண்டாட்ட நிகழ்ச்சியை நேற்று பிரதமர் மோடி டெல்லி விக்யான் பவனில் தொடங்கி வைத்தார். 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கடந்த 8 ஆண்டுகளில் அமைச்சகத்தின் பணிகளை விவரிக்கும் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. பார்வை குறைபாடு உள்ளவர்கள் எளிதில் கண்டறியும் வகையில் 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களின் சிறப்பு தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார். 

மேலும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் கடனுதவி திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜன் சமர்த் வலைதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசுகையில்.,கடன் வழங்குவோரையும், பெறுவோரையும் ஒரே தளத்தில் சந்திக்க வைத்து கடன் பெறும் நடவடிக்கையை எளிதாக்க இந்த வலைதளம் உதவும். புதிய சிறப்பு நாணய தொகுப்பு நாட்டின் வளர்ச்சியை நோக்கி உழைக்க மக்களை ஊக்குவிக்கும். ஜன் சமர்த் போர்ட்டல் மூலம் மேலும் பலர் கடன்களை பெற முன் வருவார்கள். 

சர்வதேச வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலியின் முக்கிய அங்கமாக இந்தியாவின் வங்கிகள் மற்றும் நாணயங்களை மாற்ற வேண்டியது அவசியம். அதில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல நிதி மற்றும் பெருநிறுவன நிர்வாக நடைமுறைகளை நிதி நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். இந்தியா பல்வேறு நிதி சேர்க்கை தளங்களை உருவாக்கி உள்ளது. அவற்றை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த நிதி சேர்க்கை தீர்வுகளை உலகளவில் விரிவுபடுத்துவதற்கான முயற்சியை செய்ய வேண்டும். 

கடந்த 8 ஆண்டுகளில் மக்களை மையப்படுத்திய நிர்வாகமும் நல்லாட்சிக்கான தொடர் முயற்சியும் அரசின் தனிச்சிறப்பம்சம். நிரந்தர குடியிருப்பு, மின்சாரம், எரிவாயு, குடிநீர் மற்றும் இலவச சிகிச்சை ஆகியவை ஏழைகளுக்கு மரியாதையை வழங்கியுள்ளது. ஏழைகள் கண்ணியத்துடன் வாழ வாய்ப்பளித்தது. கடந்த காலங்களில் அரசாங்கத்தை மையமாக கொண்ட நிர்வாகத்தின் சுமைகளை நாடு தாங்கியது. ஆனால் இன்று இந்தியா, மக்களை மையமாக கொண்ட ஆட்சியின் அணுகு முறையுடன் முன்னேறி வருகிறது. 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலவச ரேஷன் திட்டம், 80 கோடிக்கும் அதிகமான மக்களை பசியின் பயத்தில் இருந்து விடுவித்தது. இளைஞர்கள் தாங்கள் விரும்பும் நிறுவனத்தை எளிதில் திறக்கலாம். எளிதாக உருவாக்கலாம். எளிதாக நடத்தலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு செய்துள்ள சீர் திருத்தங்களில் இளைஞர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தவும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் முன்னேறுவது மட்டுமின்றி புதிய உயரங்களையும் எட்டுவதை உறுதி செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!