முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காப்புக்காடுகளை ஒட்டி குவாரிகள்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு அரசாணையை எதிர்த்த வழக்கில் நடவடிக்கை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
High-Coiurt 20221 02 02

Source: provided

சென்னை: தமிழ்நாட்டில் காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள், காப்புகாடுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது என 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு கனிமவள விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, காப்புக் காடுகள் நீக்கப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து மாற்றத்துக்கான இந்தியா என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரி நடவடிக்கைகள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதன் மூலம், அப்பகுதிகளில் குவாரி நடவடிக்கைகள் தொடங்கப்படலாம். அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி வன விலங்குகளுக்கும் ஈடுகட்ட முடியாத பாதிப்பை ஏற்படுத்தும். குவாரி உரிமையாளர்களின் அழுத்தத்துக்கு பணிந்து முந்தைய ஆண்டு பிறப்பித்த அரசாணை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. எந்த நியாயமான காரணமும் இல்லாமல், காப்புக்காடுகளில் குவாரி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்திய இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் மார்ச் 2-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து