முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

9 அணிகள் இடையிலான 5-வது புரோ ஹாக்கி லீக் தொடரின் 2-வது கட்ட போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அபாரமாக ஆடிய இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அசத்தியது. இதையடுத்து 2-0 என இந்திய அணி முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து 3வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 3-0 என முன்னிலை பெற்றது. 4-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிவரை அயர்லாந்து அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நீலகண்ட சர்மா, ஆகாஷ்தீப் சிங், குர்ஜந்த் சிங் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

____________________________________________________

ஹரிஸ் விளையாடுவது சந்தேகம்

டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. 2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரஃப் விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்காக விளையாடும் போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் சரியாக குறைந்தது 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎஸ்எல் சீசனின் எஞ்சிய ஆட்டத்தையும் ஜூன் 2-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பையையும் அவர் இழக்க நேரிடும்.

____________________________________________________

ரூட் அவுட் குறித்து வாகன்

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (11 ரன்) 2-வது இன்னிங்சில் அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்த போது பந்து லெக் ஸ்டம்பை தாக்குவது தெரிந்ததால் முடிவை மாற்றிக் கொண்ட நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தொழில்நுட்பத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. பந்து பாதிக்கு மேல் லெக்ஸ்டம்புக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஆனாலும் சிவப்பு லைட் ஒளிர்கிறது. எல்.பி.டபிள்யூ.வை கண்டறிய பயன்படுத்தப்படும் 'ஹாக்ஐ' நுட்பம் இந்த தொடர் முழுவதும் சராசரி அளவில் தான் இருக்கிறது. எப்படியோ அது இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேனான ஜோ ரூட்டின் கதையை முடித்து விட்டது' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையானதும் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இன்னொரு பதிவில் ரூட்டின் அவுட்டுக்கான ரீப்ளேயை ஏன் அதிக முறை போட்டு காண்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

____________________________________________________

குஜராத்தை வீழ்த்தியது மும்பை 

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அந்த அணியின் அமெலியா கெர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் ஜெயன்ட்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.

____________________________________________________

உறுதியாக இருந்தேன்: கில்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் ஆகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக என்னிடம் திட்டம் இருந்தது. எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடும்போது நான் ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடுவேன். இந்த முறை பதற்றமின்றி இறங்கி விளையாடினேன். ஆடுகளத்தில் உள்ள பிளவுகளில் பந்து படும்போது அந்த பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. மற்றபடி ஆடுகளம் நன்றாகவே இருந்தது.

துருவ் ஜுரல் மற்றும் குல்தீப் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர். அவர்களது 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவியது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 80 - 100 ரன்கள் முன்னிலையில் இருந்தால் நல்லது என பேசிக் கொண்டிருந்தோம். ஜுரல் மற்றும் குல்தீப்பின் பேட்டிங் எங்களது எதிர்பார்ப்புகளையும் தாண்டி பூர்த்தி செய்துவிட்டது. இங்கிலாந்து அணிக்கு வெறும் 46 ரன்களே முன்னிலை கிடைத்தது. முன்னிலை குறைவாக இருந்ததால் எங்களால் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமானதாக மாற்ற முடிந்தது என்றார்.

____________________________________________________

ஆந்திர அணிகாக விளையாட மாட்டனே: ஹனுமா விஹாரி 

ரஞ்சிக் கோப்பையில் ஆந்திரம் காலிறுதிப் போட்டியில் மத்திய பிரதேசத்திடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், ஆந்திர அணியின் முன்னாள் கேப்டன் ஹனுமா விஹாரி ரஞ்சிக் கோப்பையில் இனி ஒருபோதும் ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன் எனக் கூறியுள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக ஹனுமா விஹாரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஆந்திர அணிக்காக ஒருபோதும் விளையாடக் கூடாது என முடிவெடுத்துள்ளேன். அந்த அணியில் எனது சுயமரியாதையை இழந்து விட்டேன். எனக்கு ஆந்திர அணியைப் பிடிக்கும். நாங்கள் ஒவ்வொரு சீசனிலும் வளர்ந்து வருகிறோம். ஆனால், ஆந்திர கிரிக்கெட் அமைப்பு நாங்கள் வளர்வதை விரும்பவில்லை எனப் பதிவிட்டுள்ளார். ரஞ்சிக் கோப்பையின் முதல் போட்டிக்குப் பிறகு ஆந்திர அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஹனுமா விஹாரி விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஆந்திர அணிக்காக ஒருபோதும் விளையாட மாட்டேன் என விஹாரி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து