முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குகேஷ் தரமான பதிலடி

செவ்வாய்க்கிழமை, 28 அக்டோபர் 2025      விளையாட்டு
Gugesh-Neboniyaach

Source: provided

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இது உலகின் நான்கு சிறந்த வீரர்கள் பங்கேற்கும் ஒரு குறுகிய விரைவு சதுரங்கப் போட்டியாகும். இதில் இந்தியாவை சேர்ந்த குகேஷ், உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், ஹிகாரு நகமுரா மற்றும் ஃபேபியானோ கருவானா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த குகேஷ் முதல் போட்டியில் கார்ல்சனுடன் தோல்வியடைந்து மோசமான தொடக்கத்தை கொடுத்தார். இதனையடுத்து நகமுரா மற்றும் கருவானாவுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் அவர் வலுவாக மீண்டு வந்தார்.

குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு குகேஷ்-க்கு எதிராக வெற்றி பெற்ற பிறகு அவரது ராஜா காயை எடுத்து ரசிகர்கள் திசையில் நகமுரா தூக்கி எறிந்தார். இதை பார்த்த குகேஷ், சிரிப்புடன் அதனை கடந்து சென்றார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது நகமுராவுக்கு எதிராக குகேஷ் வெற்றி பெற்ற பிறகு கைகுலுக்கி அமைதியுடன் வெற்றியை கொண்டாடினார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு, ரூ.1.05 கோடி பரிசு கிடைக்கும். 2ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.78 லட்சமும், 3ம் இடம் பிடிக்கும் வீரருக்கு, ரூ.62 லட்சமும் பரிசாக கிடைக்கும்.

_________________________________________________________________________________________________________________

இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் 

23 வயதுக்குட்பட்டோருக்கான 2025 ஆம் ஆண்டு அண்டர் 23 உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் செர்பியாவின் நோவி சாட் நகரில் அக்டோபர் 20 முதல் 27 வரை நடைபெற்றது. இந்த போட்டி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறும். இதில் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 65 கிலோ பிரிவில் இந்திய தரப்பில் சுஜீத் கல்கல் பங்கேற்றார். இவர் கால் இறுதியில் இருமுறை U23 உலக சாம்பியனான பஷீர் மகோமெடோவை 4-2 என்ற கணக்கில் வென்றார். அரையிறுதியில் ஜப்பானின் யூடோ நிஷியூச்சியை 3-2 என்ற கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் உமிட்ஜான் ஜலோலோவுடன் சுஜீத் மோதினார். இந்த ஆட்டத்தில் 10-0 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சுஜீத் தங்கம் பதக்கம் வென்றார். இந்த வெற்றியானது 2025 ஆம் ஆண்டில் மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கமாகும். இந்தியா இந்த தொடரில் மொத்தம் 9 பதக்கங்களை வென்று 7-வது இடத்தில் உள்ளது. இதில் சுஜீத் வென்றது மட்டுமே தங்கப் பதக்கமாகும். 2 வெள்ளி 6 வெண்கல பதக்கம் ஆகும். சுஜீத் கல்கல் U23 உலக சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற 4-வது இந்திய மல்யுத்த வீரராவார்.

_________________________________________________________________________________________________________________

அதிரடியாக விளையாடுவோம்: மார்ஷ்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காதென அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு சவால் மிகுந்த அணியாக நாங்கள் இருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறோம். அதிரடியாக விளையாடுவதுதான் டி20 வடிவிலான கிரிக்கெட்டின் இயல்பு என நினைக்கிறேன்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாகவே விளையாடவுள்ளோம். எல்லா முறையும் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்காது. நாங்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால், நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிரடியாக விளையாடுவது எங்களுக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். இந்திய அணி மிகவும் அற்புதமான அணி. இந்திய அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என நினைக்கிறேன். இரண்டு சிறந்த அணிகள் மோதிக்கொள்வதால், இந்த சவாலை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.

_________________________________________________________________________________________________________________

முன்னிலை பெற்ற தமிழகம்

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் பெங்களூவில் நடைபெற்று வரும் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை சதம் அடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்களுடனும், இந்திரஜித் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆந்த்ரே சித்தார்த் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நாகாலாந்து அணி நேற்றைய 3ம் நாள் முடிவில் 127 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 365 ரன்கள் குவித்திருந்தது. நாகாலாந்து தரப்பில் தேகா நிஸ்சல் 161 ரன்னுடனும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்டும், சந்திரசேகர் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர். இந்நிலையில்,147 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4ம் நாள் ஆட்டத்தை நாகாலாந்து நேற்று தொடங்கியது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நாகாலாந்து தனது முதல் இன்னிங்சில் 446 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நாகாலாந்து தரப்பில் தேகா நிஸ்சல் 175 ரன்கள் எடுத்தார். தமிழகம் தரப்பில் குர்ஜப்நீத் சிங் 4 விக்கெட்டும், சந்திர சேகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்சில் 66 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து தமிழக அணி தனது 2வது இன்னிங்சை ஆட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து