முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்கோட் தீ விபத்தில் 33 பேர் பலி: பராமரிப்பு இல்லாத மையத்திற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள்? - நகராட்சிக்கு குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம்

திங்கட்கிழமை, 27 மே 2024      இந்தியா
Gujarat 2024-05-27

Source: provided

காந்திநகர் : ராஜ்கோட் விளையாட்டு மைய தீ விபத்து குறித்து தாமாக முன் வந்து விசாரணை செய்த குஜராத் உயர்நீதிமன்றம் ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் இருந்தது.  தனியாருக்கு சொந்தமான இந்த விளையாட்டு மையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள்,  பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை இருந்தன.

தற்போது கோடை விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களுக்கு முன் சிறுவர்கள்,  சிறுமியர்கள், என பலரும் இந்த டிஆர்பி விளையாட்டு மையத்திற்கு வருகை தந்தனர்.  இந்நிலையில் அங்குள்ள ஒரு அறையில் எதிர்பாராத வகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு மையம் முழுவதும் பரவியது.

இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலம் ஆனது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி தற்போது வரை 9 குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை இந்த தீ விபத்து ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல்,  உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர்.  

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார்.  மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடைய இந்த தீவிபத்து தொடர்பாக 7 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தீ விபத்து குறித்து தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட குஜராத் சிறப்பு நீதிமன்றம், ராஜ்கோட் நகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது., “மனித தவறால் ஏற்பட்ட விபத்தில் அப்பாவி குழந்தைகள் பலியாகி விட்டனர்.  ராஜ்கோட் விளையாட்டு மையத்தின் தீ விபத்து நடைபெறும் வரை 4 ஆண்டுகள் நகராட்சி என்ன செய்தது? முறையான பராமரிப்பு இல்லாத விளையாட்டு மையத்திற்கு அனுமதி வழங்கியது எப்படி?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து