முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எம். சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்... கரூர் சம்பவத்தில் 3 நாட்களுக்கு பிறகு மவுனம் கலைத்த விஜய்..! வீடியோ வெளியிட்டு பரபரப்பு பேச்சு

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2025      தமிழகம்
Vijay-2025-09-30

சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக 3 நாட்கள் கழித்து மவுனம் கலைத்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கரூருக்கு நேரில் வருவேன் என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றால், தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தனது கட்சித் தொண்டர்களை ஏதும் செய்ய வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு வெளிப்படையாக சவால் விட்டுள்ளார். மேலும், முன்பைவிட வலுவாக அரசியல் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “அனைவருக்கும் வணக்கம். என் வாழ்க்கையில் இது மாதிரியான வலி மிகுந்த நிகழ்வை நான் சந்தித்ததே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே இருக்கிறது.

இந்தச் சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அது அவர்கள் என் மீது வைத்துள்ள பாசமும், அன்பும் . அதற்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் தான், அவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருக்கும்.

அரசியல் காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு மக்கள் பாதுகாப்புக்கான இடங்களை கேட்பதில் கவனமாக இருப்போம். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே. அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது எப்படி அந்த இடத்தை விட்டு வர முடியும்?. நான் திரும்ப அங்கு சென்றால், அது வேறு சில அசம்பாவிதங்கள், பதற்றங்களை ஏற்படுத்தக் கூடும். அதனால் தான் திரும்பிச் செல்லவில்லை.

இந்தத் தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த உயிரிழப்புகளுக்கு நான் என்ன ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் எல்லோரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்தில் எங்களுடைய வலிகளை புரிந்து கொண்டு எங்களுக்காகப் பேசிய அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எப்.ஐ.ஆர். போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.

சி.எம். சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும். என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து