முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      விளையாட்டு
CM 2024-12-10

Source: provided

தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாட்டில் நடைபெற்ற பிஜெல்ஜினா ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்று, இந்தியாவின் 90 ஆவது கிராண்ட் மாஸ்டராகவும் தமிழ்நாட்டின் 35 ஆவது கிராண்ட் மாஸ்டராகவும் சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர். இளம்பரிதி (வயது 16) தேர்வாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவரது இந்தச் சாதனைக்கு, தமிழ்நாட்டின் துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த, அவரது பதிவில், ”வரலாற்றில் இளம்பரிதி தனது திறமையை வெளிப்படுத்தி, பட்டத்தைப் பெற்று தமிழ்நாட்டின் சாம்பியன் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தைச் சேர்த்துள்ளார்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தமிழ்நாடு சதுரங்கத்தில் சூரியன் உதிக்கும்போது, இன்னும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி வருவதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

____________________________________________________________________________________________________

கருப்புபட்டை அணிந்திருந்த வீரர்கள்

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி-20 போட்டியில், கேப்டன்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் மிட்செல் மார்ஷ் உட்பட இரு அணி வீரர்களும் தங்களது கைகளில் கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கியுள்ளனர். ஏனென்றால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரரான பென் ஆஸ்டின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது குடும்பத்தினருக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவிக்கும் வகையிலும் இரு அணி வீரர்களும் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர். 

மெல்போர்னைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின், ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கழுத்துப் பகுதியில் அதிவேகமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, 2 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த போட்டியில் மட்டுமில்லாமல் நேற்று நவி மும்பையில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனைகள் பென் ஆஸ்டினின் நினைவாகக் கருப்புப் பட்டைகளை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

____________________________________________________________________________________________________

ஜெமிமாவின புகைப்படம் வைரல்

மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது புகைப்படம் மற்றும் அவரது தந்தையுடன் வெற்றியை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியிடம் ஜெமிமா வெற்றி கோப்பையை வாங்கும் சிறிய வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிப்பதில் வல்லவரான எம்எஸ் தோனியுடன் மகளிர் அணியின் பினிஷர் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

____________________________________________________________________________________________________

காலிறுதியில் சின்னர், மெத்வதேவ் 

பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் லாரென்சோ சொனேகா உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய சொனேகா முதல் செட்டை 6-3 என வென்றார். 

இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

____________________________________________________________________________________________________

ஆஸி., வீராங்கனை சாதனை சதம்

உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் விளாசி ஆஸ்திரேலிய வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு சாதனை படைத்துள்ளார். ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நவி மும்பையில் நேற்று (அக்டோபர் 30) நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்டு சதம் விளாசி அசத்தினார். அவர் 93 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். போட்டியில் சதம் விளாசியதன் மூலம், உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் சதம் விளாசிய இளம் வீராங்கனை என்ற சாதனையை ஃபோப் லிட்ச்ஃபீல்டு படைத்தார். அதேபோல, உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் சதம் விளாசிய மூன்றாவது ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன்பாக, அலிஸா ஹீலி மற்றும் கேரன் ரால்டன் நாக் அவுட் போட்டிகளில் சதம் விளாசியுள்ளனர்.

____________________________________________________________________________________________________

ஓய்வு குறித்து அலிசா சூசகம்

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் நவி மும்பையில் (அக். 30) நடைபெற்ற 2-வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் விளாசி இந்திய அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி பேசுகையில், “இந்தத் தொடர் முழுவதுமே எல்லாருமே சிறப்பாக பங்களித்ததாக நினைக்கிறேன். அதனால்தான் தற்போது இங்கு நிற்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

நாங்கள் எங்களால் முடிந்தளவு செய்தோம். போட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்தினோம். வாய்ப்புகளையும் உருவாக்கினோம். ஆனால், அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை” என்றார். அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த 35 வயதான அலிசா ஹீலி, “நான் அங்கு இருக்கமாட்டேன். அடுத்தச் சுற்றுக்கு அதுதான் அழகு. அடுத்தாண்டின் நடுப்பகுதியில் டி20 உலகக் கோப்பை நடைபெறவிருக்கிறது. எங்கள் அணியினருக்கு மிகவும் உற்சாகமாகவுள்ளது. ஆனால், ஒருநாள் கிரிக்கெட் அணியில் சில மாற்றங்கள் ஏற்படலாம்” என ஓய்வு முடிவு குறித்து சூசகமாகத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து