முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
உலகிலேயே வெள்ளி காசை விட மிகச்சிறிய உருவம் கொண்ட வவ்வால்

உலகிலேயே மிக சிறிய வவ்வால் இனங்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண வெள்ளி காசுகளை காட்டிலும் உருவத்தில் சிறியவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கிட்டிஸ் ஹாக் நோஸ் வவ்வால் அல்லது பம்பிள்பீ வவ்வால் என இவை அழைக்கப்படுகின்றன. இவற்றின் எடை 2 கிராமுக்கும் சற்று குறைவுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அழிந்து வரும் அரிய வகை இனமான இந்த வவ்வால்கள் பொதுவாக தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படுகின்றன. ஆற்றங்கரையோாரம் உள்ள பாறைகளின் குகைகளே இவைகளின் வசிப்பிடங்களாகும். இவை கூட்டம் கூட்டமாக வசிக்கக் கூடியவை. ஒரு கூட்டத்தில் சுமார் 100 வவ்வால்கள் வரை காணப்படும்.

உலகின் மிக பழமையான ஒயின் பாட்டில் அண்மையில் கண்டுபிடிப்பு

மேலைநாடுகளில் ஒயினை தயாரிப்பதும், அவற்றை நூறாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக பாதுகாப்பதும் வழக்கம். அண்மையில் ரோமை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் கல்லறை ஜெர்மனியில் அமைந்துள்ளது. அதில்தான் உலகிலேயே மிகவும் பழமையான ஒயின் பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒயின் 4 நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1650 ஆண்டுகள் பழமையானதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதால் திறந்தால் என்ன ஆகும் என்றோ, தற்போது அது நச்சுத் தன்மைய உடையதாகவோ மாறியிருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் திறக்கப்படாத பாட்டிலில் அடைக்கப்பட்ட மிக பழமையான ஒயினாக இது கருதப்படுகிறது.

விட்டில்களின் சத்தத்தை வைத்து இன்றையதட்ப வெப்பத்தை சொல்லி விட முடியுமா?

இதென்ன புதுசா இருக்கு.. என்கிறீர்களா... ஆம் விட்டில் பூச்சிகளின் சத்தத்தை வைத்து தட்ப வெப்ப நிலையை நம்மால் கூறிவிட முடியும் என்றால் ஆச்சரியம் தானே... நாம் எப்போவாது இயற்கையை உற்று கவனித்திருந்தால்தானே இதெல்லாம் புரிய போகிறது. இதையெல்லாம் நவீன அறிவியல் விஞ்ஞானிகள் வந்து கண்டு பிடித்து சொல்லும் அளவுக்கு இயற்கையில் இருந்து அந்நியமாகி விட்டோம். சரி கதைக்கு வருவோம்.. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விட்டில் பூச்சிகளின் சத்தத்தை கவனியுங்கள்... ஒரு நொடிக்கு எத்தனை என கணக்கிட்டு கொள்ளுங்கள்.. உதாரணமாக விநாடிக்கு 15 முறை சத்தமிடுகிறிது என வைத்துக் கொள்வோம்.. அதோடு 37 ஐ கூட்டுங்கள்... அவ்வளவுதான் இதுதான் அன்றைய வெப்ப நிலை.. இதை வைத்தே சூழலின் தட்ப வெப்பத்தை சொல்லிவிட முடியும் என்றால் ஆச்சரியம் தானே.

நத்தையின் வாயில் பல்லாயிரம் கோடி நுண் பற்கள் இருக்காம்

ஆள் பார்க்க சாதுவாக இருக்கானே இவன் என்ன செய்ய ேபாகிறான் என எவரையும் குறைவாக எடை போட்டு விடக் கூடாது. அது மாதிரிதான் மெல்லிடலி வகையை சேர்ந்த நத்தையும் பார்க்க சாதுவாக இருந்தாலும் அவையும் தன்னுள் மிகப் பெரிய ஆச்சரியங்களை கொண்டுள்ளன. மெல்ல ஊர்ந்து சென்றாலும், ஒரு பிளேடின் விளிம்பில் கூட நத்தையால் ஊர்ந்து விட முடியும்... அது மட்டுமா... பார்க்க புழு போல இருந்தாலும் அதன் வாயில் பல்லாயிரம் கோடி மைக்ரோ பற்கள் இருக்காம்.. கவலைப்படாதீர்கள் நம்மை கடிக்காது. தனக்கு தேவையான உணவை கொறித்து உண்ணத்தான் இயற்கை இப்படி அற்புதத்தை அதற்கு வழங்கியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...

நிலா பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கிறதாம்

பூமி சூரியனை சுற்றுவது போல, நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் அறிந்த விசயம்தான். ஆனால் பலருக்கும் தெரியாத விசயம் என்னவென்றால், நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறதாம்... இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த விலகல் ஒவ்வொரு ஆண்டும் 1.48 அங்குலம் அளவுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நமது நகங்கள் வளரும் வேகத்துக்கு இணையாக. அதே போல தொடக்கத்தில், அதாவது நிலா தோன்றிய போது பூமிக்கு மிக அருகில் இருந்துச்சாம்.. அதாவது அப்போது வெறும் 14 ஆயிரம் மைல் தொலைவில். தற்போது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு 2 லட்சத்து 50 ஆயிரம் மைல். இன்னும் சில லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மார்கள் நிலவை காட்டி சோறூட்ட முடியாது, காதலர்கள் நிலவை உதாரணம் காட்டி பாட முடியாது என்றால் ஆச்சரியம் தானே.

சமையல் எண்ணெய்யில் விமானத்தை இயக்க முடியுமா?

இதஎன்ன புது கலாட்டா... இன்றைக்கு உலகில் கிடைக்கும் பெட்ரோலிய எண்ணெய்களில் பெரும்பாலானவற்றை இந்த விமானங்கள் தான் குடித்து தீர்க்கின்றன. ஆண்டு தோறும் கோடிக்கணக்கான லிட்டர் எரிபொருளை விமான போக்குவரத்துக்கு செலவிட வேண்டியுள்ளது. போகிற போக்கை பார்த்தால், டூவிலருக்கே பெட்ரோல் கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் உலகின் பல்வேறு நாடுகளும் பசுமை எரிபொருளுக்கு மாறத் தொடங்கியுள்ளன. அதன் தொடக்கமாக ஆஸ்திரேலியாவில் உள்ள சரக்கு விமான நிறுவனம் ஒன்று தனது விமானத்தில் பெட்ரோலுடன் சமையல் எண்ணெய்யையும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து சோதனை ஓட்டம் நிகழ்த்தியது. இது வழக்கமான எரிபொருளை விட குறைவான கார்பனை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. எதிர்காலத்தில் சமையல் எண்ணெய்யில் விமானத்தை நாங்கள் தயார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அது சரி.. இந்தியா போன்ற நமது நாடுகளில் பிறது எதை கொண்டு சமையலை தாளிக்க முடியும்... என்னமோ போங்க.. எதிர்காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லனும்.