முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
இணையம் வருவதற்கு முன்பே இமெயில்

இன்றைக்கு இமெயிலில் மிக வேகமாக செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்பு ஒருமுறையாவது யோசித்து பார்த்திருக்கிறோமா... முன்பெல்லாம் ஒரு வரியை அனுப்புவது என்பதே அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில் 80களின் இறுதியில் டேட்டாபேஸ் என்ற தொழில் நுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒரு இமெயிலை எவ்வாறு அனுப்புவது என்பதை செய்து காட்டினர். அதில் ஒரு கம்பியூட்டரையும், தொலைபேசியையும் இணைத்தனர். இது மைக்ரோநெட் என அழைக்கப்பட்டது. இது www  என அழைக்கப்படும் இணையத்துக்கு முந்தைய காலம். அப்போது URL முகவரியெல்லாம் கிடையாது. வெப் பக்கங்களுக்கு வெறும் எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இமெயில்களுக்கான வெப் எண் 7776. என்ன கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.

பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தவர்

எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.

மர்மமான எலும்புக்கூடு ஏரி எங்குள்ளது தெரியுமா

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூப் குந்த் என்ற இடத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான மலைகளில் ஒன்றான திரிசூலில் ஒரு செங்குத்தான சரிவில், கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் ஒரு ஏரி அமைந்துள்ளது. 1942 ஆம் ஆண்டு இங்கிலாந்து வன பாதுகாவலர் ரோந்து பணியின் போது அங்கே ஏராளமான எலும்புக் கூடுகள் பனியில் புதைந்திருப்பதை கண்டு தெரிவித்தார். அவை அங்கு எப்படி வந்தன என்பது புரியாத மர்மமாகவே இன்று வரை நீடித்து வருகிறது.  அவர்கள் 9 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அப்போது முதல் அந்த ஏரி எலும்புக்கூடுகளின் ஏரி என அழைக்கப்பட்டு வருகிறது.

பென்குயினை கணக்கெடுக்கும் போஸ்ட் ஆபீஸ்

ஆள் அரவமற்ற அமைதியாக பென்குயின்கள் மத்தியில் வேலை செய்ய விரும்புகிறீர்களா.. அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் அண்டார்டிகாவில் உள்ள பிரிட்டன் அறக்கட்டளைக்கு சொந்தமான போர்ட் லாக்ராய் என்ற இடத்திலுள்ள தபால் அலுவலகத்துக்கு தான். இந்த அலுவலகம் 1944 இல் பிரிட்டன் தன்னார்வ அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு 1962 வரை தபால் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வீடுகளுக்கு எழுத விரும்பும் கடிதங்களை தயார் செய்து அனுப்பும் பணியை மேற்கொண்டது. ஆள் இல்லாத காலங்களில் பென்குயின் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டது. தற்போது யார் கடிதம் அனுப்புறா.. எனவே தபால்களை எண்ணுவதற்கு பதிலாக பென்குயின்களை எண்ணும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. என்ன நீங்க ரெடியா..

சீச்சீ இந்த ஹோட்டலுக்கு போகாதீங்க.. உவ்வே...

ஜப்பானில் உள்ள தலைநகரான டோக்கியோவில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலையில் ஒரு ரெஸ்டாரெண்ட் தொடங்கப்பட்டது. இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா.. அதன் பெயர் அமிர்தம் என்பதாகும். விஷயம் அதுவல்ல. இந்த ஹோட்டலுக்குள் 18 வயது முதல் 60 வயது வரையிலான அதிலும் குறிப்பாக அதிக எடை இல்லாதவர்களும், உடலில் டாட்டூ குத்தி கொள்ளாதவர்களுக்கு மட்டுமே அனுமதி. அது மட்டுமா அவர்கள் அனைவரும் ஆடைகளின்றியே ஹோட்டலுக்குள் வலம் வர வேண்டும் என்பதும் கூடுதல் நிபந்தனை. சராசரி காட்டிலும் உங்கள் உடல் எடை 15 கிலோ கூடுதலாக இருந்தால் தனியாக தெரிவித்து முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி. எப்படி ஒரு விநோத ஹோட்டல் பாருங்கள்.

வரலாற்றில் 7 ஆண்டுகள் பின்தங்கிய எத்தியோப்பியா

இதென்ன புதுசாக இருக்கே என்று யோசிக்கிறீர்களா... ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சார மக்களுக்கும் பல்வேறு வகையான கால கணக்கு அதாவது காலண்டர், நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாங்கம் உள்ளது. அதன் படி எத்தியோப்பியாவின் காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள். கடைசி மாதமான பகுமே என்ற மாதத்தில் மட்டும் 5 நாட்கள். இதனால் இவர்கள் எப்போதும் மற்ற நாடுகளின் காலத்துடன் ஒப்பிடும் போது 7 ஆண்டுகள் பின்தங்கியே உள்ளனர். அவர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தை செப்டம்பர் 11 ஆம் தேதிதான் கொண்டாடுகின்றனர். புதிய நூற்றாண்டு தொடக்கத்தை அவர்கள் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல்தான் கொண்டாடினர் என்றால் ஆச்சரியம் தானே