தந்தையுடன் கருத்து வேறுபாடு: துபாய்க்கு போனார் பிலாவல்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மார்ச். 27 - பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடனான கருத்து வேறுபாடால் அவரது மகன் பிலாவல் பூட்டோ துபாய்க்கு சென்று விட்டார். சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் அதிகாரம் யாருக்கு என்ற அதிகாரப் போட்டியில்தான் அவர் துபாய்க்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பில் 24 வயதான பிலாவல் அமர்ந்த பிறகு கட்சியில் எல்லாமே தாம்தான் என்று கருதியிருக்கிறார். ஆனால் அவரது சகோதரி பர்யால் தல்பூரின் தலையீடு அவருக்கு செம கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

குறிப்பாக சிந்து மாகாணத்தில் தமது ஆதரவாளர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் சகோதரி பர்யால் தலையிட்டு அவரது ஆதரவாளர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமது 200 ஆதரவாளர்களுக்கு பணி வழங்க சிந்து மாகாண முன்னாள் முதல்வரிடம் பிலாவல் கூறியிருக்கிறார். இதையும் பர்யால் தலையிட்டு கெடுத்திருக்கிறார்.

இதுமட்டுமன்றி தீவிரவாதிகளின் வன்முறை தாக்குதல் சம்பவங்களை சர்தாரி சரியாகக் கையாளவில்லை என்றும் பிலாவல் கொந்தளித்திருக்கிறார். அதுவும் சிறுமி மலாலா சுடப்பட்ட விவகாரத்தை இம்ரான்கான் கட்சியைப் போல மிகத் தெளிவாக கையாளவில்லை என்றும் அப்செட் ஆகியிருக்கிறார்.இந்த மோதலின் உச்சகட்டமாக அவர், நானே நமது பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஓட்டுப் போடாமல் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். இப்படி மிகவும் வெறுத்துப் போன நிலையில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய்க்குப் போயிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: