முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு வேண்டுகோள்

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.18 - எதிர்க்கட்சிகளின் வேண்கோளை ஏற்று பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., வை முதலில் பேச அனுமதிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார். தமிழக சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:-

ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும்; மரபுகள் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் நடைபெறும் விவாதங்களை துவக்கி வைக்கும் வாய்ப்பினை தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தாங்கள் அளித்தீர்கள். அவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கும் வகையில் அதிகமான நேரத்தையும் தாங்கள் ஒதுக்கினீர்கள்.  

ஆனால், தே.மு.தி.க. உறுப்பினர்களோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமான நேரம் பேரவையில் பேசிவிட்டு, கடைசியில் தங்களுக்கு போதிய நேரத்தை ஒதுக்கவில்லை என்று தெரிவித்து வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், பேரவையின் மாண்பினை மாசுபடுத்தும் வகையிலும், தங்களையே கொச்சைப்படுத்தும் வகையிலும் அவையில் நடந்து கொண்டார்கள்.  

பேரவையின் ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைக்கும் வகையிலோ, பேரவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலோ நடந்து கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய அதிகாரம் தங்களுக்கு உண்டு. அதே போன்று, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 98-ன்கீழ், பேரவை உறுப்பினர்கள் உரையாற்றும் வரிசை முறையை நிர்ணயிக்கின்ற அதிகாரமும் தங்களுக்கு உண்டு.

இவற்றின் அடிப்படையில், தே.மு.தி.க. உறுப்பினர்களின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அவையின் மாண்பினை பாதுகாக்கும் வகையிலும், தங்களுக்குள்ள பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி, விதிகளுக்கும், நாடாளுமன்ற நடைமுறைகளுக்கும் உட்பட்டு, அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்த தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் நடைபெறும் விவாதங்களில் கடைசியாக பேசவேண்டும் என்று தாங்கள் தீர்ப்பளித்தீர்கள். தங்களுடைய தீர்ப்பில் யாரும் குறுக்கிட முடியாது.  இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. 

இருப்பினும், எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் இதுகாறும் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களை விவாதங்களை துவக்கி வைத்துப் பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் நேற்று இந்த அவையில் இதை வலியுறுத்தினார். 

ஜனநாயக மரபுகள் காக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளினை ஏற்று, இது குறித்து தாங்கள் ஏற்கெனவே அளித்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அமைகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்