முக்கிய செய்திகள்

உ.பி.யில் வன்முறையால் பாதித்த பகுதிகளில் பதட்டம் நீடிப்பு

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Uttarpradesh 0

 

கிரேட்நொய்டா,மே10 - உத்தர பிரதேசத்தில் 2 போலீஸ்காரர்களை விவசாயிகள் அடித்துக்கொன்ற சம்பவத்தை அடுத்து சம்பவம் நடந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கிரேட்நொய்டா என்ற இடத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது 2 போலீஸ்காரர்களை  விவசாயிகள் அடித்துக் கொலை செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து கிரேட் நொய்டா பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த சில அரசியல் கட்சி தலைவர்கள் கிரேட் நொய்டா நோக்கி புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜ.க.மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சிவபால் சிங் யாதவ், மோகன் சிங் ஆகியோரை அவர்களது ஆதரவாளர்களுடன் போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் அரசு விவசாயிகளுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி பிறகு அதை தனியார் கம்பெனிகளுக்கு அதிக விலைக்கு விற்கும் போக்கை மாயாவதி அரசு கடைப்பிடித்து வருகிறது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

விவசாயிகளின் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பதட்டமான நிலைமை காணப்படுகிறது. இங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: