மியான்மரில் ராஜபக்சேவுடன் மன்மோகன் சிங் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2014      இந்தியா
Image Unavailable

 

நய்பிதாவ், மார்ச்.5 - மியான்மரில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர் பிரச்சினை, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.

கடந்த 2012- ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் - இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுவது இது முதல் முறையாகும்.

தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் திங்கள் கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் மன்மோகன் சிங், ராஜபக்சேவை சந்தித்துள்ளார்.

அவருடைய இந்த சந்திப்பு, உள்நாட்டில் ராஜபக்சேவுடனான சந்திப்புக்கு எதிர்ப்பு இருந்தாலும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா எப்போதுமே கருதுகிறது என்பதை பறைசாற்றும் விதமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என ராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதுதவிர, ஜெனீவா மனித உரிமை மாநாட்டு கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்தும் பிரதமர், ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக தெரிகிறது.

ஐ.நா. தீர்மானம் பொருத்தவரையில், வலுவான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் அதே வேளையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் டெல்லி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இரண்டு முறை ஓட்டளித்துள்ளது. ஆனால் அண்மைகாலமாக இலங்கையை சீனாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தனது நட்பு வளையத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கும் தருணத்தில், இந்தியா வெளியுறவுக் கொள்கையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமா இல்லை எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள வாக்கு வங்கியை குறி வைத்து முடிவெடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை அதிபரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுகிறார் என்ற செய்தி, தமிழர்களையும் தமிழகத்தையும் புறக்கணிக்கும் செயலாகும். காங்கிரஸும் மத்திய அரசும் ஏன்தான் இப்படியெல்லாம் செய்கிறார்களோ புரியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை கூறியிருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள குர்ஷித், இலங்கையுடன் அவ்வப்போது இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொள்வது அங்குள்ள தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்காகவே என்றார்.

மேலும், மத்திய அரசை விமர்சிப்பவர்கள் இலங்கை வடக்கு மாகாணத்தில் வாழும் 50,000 தமிழர்களுக்கும் இந்திய அரசு வீடு கட்டி தந்திருப்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: