ஐ.பி.எல். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது

திங்கட்கிழமை, 30 மே 2011      விளையாட்டு
Image Unavailable

சென்னை, மே.- 30 ​- ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை தோற்கடித்து பட்டம் பெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இம்முறையும் வென்று கோப்பையை தக்கவைத்தது. 10 அணிகள் பங்கேற்ற 4​வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வெட்டோரி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் ஜெயித்த சென்னை கேப்டன் தோனி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதை தொடர்ந்து முரளிவிஜயும், மைக் ஹஸ்ஸியும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். முந்தைய 2 ஆட்டங்களில் சொதப்பிய இருவரும், இந்த முறை உள்ளூர் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைத்தனர். எந்த ஒரு பந்தையும் வீணாக்கி விடக்கூடாது என்ற வியூகத்துடன் விளையாடினர். அவ்வப்போது சிக்சர்களும் பறந்தன. இருவரும் நிலைத்து நின்றதால், அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்து ரன்​ ரேட் 10 ரன்களுக்கு மேலாக சென்றது. சில ரன்  அவுட்டுகளில் இருந்தும் தப்பி பிழைத்தனர். ஜாகீர்கான், வெட்டோரி, அரவிந்த் உள்ளிட்ட பெங்களூர் அணியின் பந்து வீச்சு, இவர்களை எந்த வகையிலும் மிரட்டவில்லை. இவர்கள் கொடுத்த சில வாய்ப்புகளை பெங்களூர் பீல்டர்கள் நழுவ விட்டனர். தனது அதிரடியால், மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்களை குஷிப்படுத்திய விஜய் 50 ரன்களில் இருந்த போது, கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இந்த ஜோடியை பிரிக்க பெங்களூர் மேற்கொண்ட முயற்சிக்கு 15 வது ஓவரில் தான் பலன் கிடைத்தது. ஆனால் அதற்குள் ஸ்கோர் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி எங்கேயோ சென்று விட்டது. அணியின் ஸ்கோர் 159 ரன்களை எட்டிய போது, மைக் ஹஸ்ஸி 63 ரன்களில் (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) அவுட் ஆனார். விஜய்யும் ஹஸ்ஸியும் இணைந்து சேர்த்த 159 ரன்கள், ஐ.பி.எல். வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 2008 -ம் ஆண்டு டெக்கான் அணிக்காக ஆடிய கில்கிறிஸ்ட்- லட்சுமண் ஜோடி மும்பைக்கு எதிராக 155 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சென்னை வீரர்கள் முறியடித்தனர்.
ஹஸ்ஸிக்கு பிறகு 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் தோனி களம் இறங்கினார். மறுமுனையில் சதத்தை நெருங்கிய முரளிவிஜய் துரதிர்ஷ்டவசமாக 5 ரன்களில் சத வாய்ப்பை  தவற விட்டார். அவர் 95 ரன்களில் (52 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) அரவிந்தின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் தோனி தனது பங்குக்கு 13 பந்துகளில் 2 சிக்சருடன் 22 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். இறுதிகட்டத்தில் சென்னை அணியின் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைந்து போய் விட்டது. அல்பி மோர்கல் (2 ரன்), சுரேஷ் ரெய்னா (8 ரன்) அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆனார்கள். கடைசி பந்தில் வெய்ன் பிராவோ அடித்த சிக்சரின் உதவியுடன் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 44 ரன்களே எடுத்தது. சென்னை தரப்பில் மொத்தம் 13 சிக்சரும், 7 பவுண்டரியும் விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ஓவருக்கு 10.26 ரன்கள் வீதம் அதாவது 206 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடியது. அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும், அகர்வாலும் ஆட வந்தனர். அதே சமயம் முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை, சென்னை கேப்டன் தோனி அறிமுகம் செய்தார். தோனியின் திட்டத்திற்கு நல்ல பலன் கைமேல் கிடைத்தது. அஸ்வினின் பந்து வீச்சில், அபாயகரமான பேட்ஸ்மேன் கெய்ல் (0) விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூர் அணிக்கு பல ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தவரான கெய்லை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருந்தது. அவர் ஆட்டம் இழந்ததும், அப்போதே பாதி நம்பிக்கை போய் விட்டது. இதன் பின்னர் சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் சென்னை அணி, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி தந்தது. அஸ்வினும், ஜகாதியும் பெங்களூர் பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தனர். மற்றொரு தொடக்க வீரர் அகர்வாலும் (10 ரன்) அஸ்வினுக்கு இரையானார். இதை தொடர்ந்து டிவில்லியர்ஸ் (18 ரன், 12 பந்து, 3 பவுண்டரி), விராட் கோக்லி (35 ரன், 32 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆகியோரும் முதல் 10 ஓவருக்குள் வெளியேற பெங்களூர் அணியின் கனவு முற்றிலும் தகர்ந்து போனது.
மளமள விக்கெட் சரிவால், இறுதிப்போட்டிக்குரிய பரபரப்பு இல்லாமல் ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது, ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. 20 ஓவர்களில் பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணி 2​வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை அணியே கோப்பையை வென்றிருந்தது. பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ.6 கோடியே 90 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. அதே சமயம் பெங்களூர் அணி 2 ;வது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து தோல்வியுடன் திரும்புகிறது.
 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: