முக்கிய செய்திகள்

பின்னணி பாடகர் ஜேசுதாசு 50,000 பாடல்கள் பாடி சாதனை

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், நவ. 15 - தனது இனிமையான குரலால் உலக மக்களையும் கவர்ந்திழுத்த பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ், நேற்று இசைத் துறையில் தனது பொன்விழா ஆண்டில் கால்பதித்துள்ளார். இதுவரை தனது தாய்மொழியான மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களுக்கும் மேலாக பாடி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் ஜேசுதாஸ். பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் பாடிய நீயும் பொம்மை, நானும் பொம்மை, நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற பாடலை இன்றும் கூட கேட்டு மகிழலாம். 1961 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதியன்று அவர் தனது முதல் திரைப்படப் பாடலை பாடினார். அப்போது அவர் வெறும் நான்கு வரிகள்தான் பாடினாராம். தற்போது அவருக்கு வயது 71. தனது இனிமையான, மென்மையான குரலால் தமிழ், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர் ஜேசுதாஸ். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் திரைப்படத்தில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே! என்று இவர் பாடிய பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. தாயின் பெருமையை பறைசாற்றக் கூடிய இந்தப் பாடலை திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் இன்றைக்கும் பக்தர்கள் கேட்கலாம். கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நடை சாத்தப்படும் போது ஹரிவராசனம் என்று இவர் பாடிய பாடலைத்தான் இன்றைக்கும் ஒலிபரப்புகிறார்கள். இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டால் நடை சாத்தப்படுகிறது என்று பொருள். 

இந்தப் பாடலை கேட்டதும் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் ஓடுவார்கள். இந்தப் பாடல் முடிந்ததும் கோயில் நடை சாத்தப்பட்டு விடும். அப்படிப்பட்ட சிறப்பை பெற்றவர்தான் பின்னணி பாடகர் ஜேசுதாஸ். மலையாளத்தைத் தவிர தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒடியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு போன்ற மொழிகளிலும் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் கூட நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியவர்தான் பாடகர் ஜேசுதாஸ். பாடல்களைப் பாடும் போது அர்ப்பணத்தோடு பாடக் கூடியவர் ஜேசுதாஸ். கடின உழைப்பாளியும் கூட. 3 தலைமுறை பின்னணி பாடகிகளுடன் இவர் இணைந்து பாடியிருக்கிறார். 

குறிப்பாக, பி. சுசீலா, எஸ். ஜானகி, பி. லீலா, வாணிஜெயராம், இன்றைய சித்ரா, சுஜாதா போன்ற அனைத்து பாடகிகளுடனும் இணைந்து பாடி பல மென்மையான பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கியவர்தான் ஜேசுதாஸ் என்றால் அது மிகையாகாது. அவர் நேற்று தனது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரது சாதனைகள் மென்மேலும் தொடர நாமும் அந்த ஐயப்பனை வணங்குவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: