முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு விவகாரம்: சிந்தித்து செயல்பட கோரிக்கை

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, டிச.15- இந்தியாவை, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் காங்கிரஸ் ஆண்டுவிட்டது. தற்போது காங்கிரஸ் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் உள்ளது. கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு உள்ளது. தமிழ்நாட்டில்  அம்மாவின் தலைமையிலான பெரும்பான்மை பெற்ற அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

பென்னிகுக் என்ற ஆங்கிலேய பொறியாளரால் கட்டப்பட்டதுதான் இந்த பெரியாறு அணை

இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. கடந்த 1.1.1886- ல் சென்னை ராஜதானிக்கும் (மாகாணத்திற்கும்) திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே பெரியாறு திட்டத்தின் கீழ் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி 158 அடி உயரத்திற்கு அணை கட்டப்பட்டு அதில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்கிக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. 152 அடி தண்ணீர் தேக்கினால்தான் அதில் இருந்து 48 அடி தண்ணீரை தமிழ்நாட்டின் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும். எனவே ஆண்டுக்கு 9600 மில்லியன் கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு பயன்பட்டு வந்தது. இந்த தண்ணீரை நம்பித்தான் குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்ட உழவர் பெருமக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த மாவட்டங்களில் மக்களின் பிரதான குடிநீராகவும் பெரியாற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 1973- ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து வெளிவந்த பத்திரிக்கை ஒன்றில் பெரியாறு அணை பலவீனம் அடைந்து இருப்பதாகவும், அதனால் ஆபத்து நேரிடலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது. இது அடிப்படையற்ற ஒரு பொய்ச் செய்தியே ஆகும். அப்போது மத்திய அரசின் வல்லுனர் குழு பார்வையிட்டு, அணை உறுதியாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று சான்றளித்தது. அப்போது முதல் கேரள அரசு, அணை பலவீனம் அடைந்துள்ளதாக ஒரு திட்டமிட்ட பொய்ச் செய்தியை பரப்பி வந்ததால், 25.11.1979-ல் மத்திய நீர்ப்பாசனக் குழுமத்தின் தலைவர் முன்னிலையில் பெரியாறு அணையை மேலும் பலப்படுத்தலாம் என்றும், தற்காலிகமாக நீர்த்தேக்க அளவு 152 அடிக்குப்பதில் 136 அடியாக இருக்கலாம் என்றும் அணையை மூன்று கட்டமாக பலப்படுத்தலாம் என்றும் முதற்கட்ட பணிக்குப்பின் 136 அடியாகவும், இரண்டாம் கட்ட பணி முடிந்தபின்பு 142 அடியாகவும், மூன்றாம் கட்ட பணிக்குப்பின் 152 அடிக்கு உயர்த்திக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. உள்நோக்கோடு கேரள அரசு அணை பலவீனம் அடைந்ததாக வெற்று வதந்தியைப் பரப்பி வந்த ஒரே காரணத்திற்காக  பலநூறு கோடி ரூபாயை அணையைப் பலப்படுத்தும் வகைக்காக தமிழ்நாடு அரசு செலவு செய்துள்ளது. விஞ்ஞான ரீதியாக அணை பாதுகாப்பாக உள்ளது என்பதையும், அதற்காக எந்தெந்த வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் தமிழ்நாட்டின் முதல்வர் அம்மா, உரிய புள்ளி விபரங்களுடன் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தி  உள்ளார். அணை பலவீனம் அடையவும் இல்லை. அது உடையும் வாய்ப்பும் இல்லை. பின் ஏன் அணை உடைந்துவிடும் அப்படி உடைந்துவிட்டால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என தொடர்ந்து பீதியை கேரள மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது என்றால் அது சுயநல அரசியலுக்காகத்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கடந்த 9.12.2011 ஆம் நாள் கேரள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணை கட்டுவது ஒன்றே தீர்வு; தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள அரசு இதுவரை உள்நோக்கோடு வதந்திகளை பரப்பி வந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தண்ணீர் தருவோம், புதிய அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள்  எனச் சொல்லி வந்த கேரள காங்கிரஸ் அரசு முந்தைய ஒப்பந்த சரத்துக்களை அப்படியே நிறைவேற்றுவோம் என ஏன் சொல்லவில்லை?

இதுநாள் வரை முல்லைப் பெரியாறு அணை பலவீனப்பட்டுள்ளதாக எந்த ஒரு வல்லுனர் குழுவும் சொல்லவில்லை. மாறாக அணை பலமாக உள்ளது என்றே தெரிவித்துள்ளன. கடந்த 27.2.2006 ஆம் நாள் உச்சநீதிமன்றம், பெரியாறு அணை நீர்மட்ட உயர்வுப் பிரச்சினை குறித்த வழக்கில், அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் எஞ்சிய பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் முன்னர் வல்லுனர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வார்கள் என தமது தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கிய பின் அந்தத் தீர்ப்பை அமுல்படுத்தாமல் முட்டுக்கட்டை போடும் நோக்கத்தில், கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தம்)சட்டம் 2006 ஐ கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அது 18.3.2006 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தையே மீறுவது ஆகாதா? இதைத் தொடர்ந்து வழக்கு தற்போது 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற  அரசமைப்பு அமர்விடம் நிலுவையில் இருந்துவருகிறது. 152 அடி தேக்கப்பட்டால்கூட 15 டி.எம்.சி. தண்ணீர்தான் நமக்குக் கிடைக்கும். தற்போது 136 அடி தேக்கப்படுவதால் 8 டி.எம்.சி. தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. நிலைமை இப்படி இருக்க, புதிய அணையின் நீர்மட்டமே 120 அடி என்றால் தமிழ்நாடு இதுகாறும் பெற்றுவந்த நீரில் 8 ல் 1 பங்குகூட கிடைக்க வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் எப்படி விவசாயம் செய்ய முடியும்? அந்த மாவட்டங்கள் எல்லாம் பாலைவனமாக மாறிவிடாதா?

முல்லைப் பெரியாறு பிரச்சனை என்பது தென் தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்சனை. சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் மைய ஆட்சியில் இருந்த தேசிய கட்சி என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிற காங்கிரஸ் தலைமையிலான தி.மு.க. உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தப் பிரச்சனை குறித்து துளியும் கவலைகொள்ளவில்லை. பிரச்சனைக்குத் தீர்வுகாண பாகுபாடின்றி நடுநிலைக் கண்ணோட்டத்தோடு  ஆக்கப்பூர்வமான  எந்த ஒரு நடவடிக்கையயையும் எடுக்காதது ஏன்? நடுவண் அரசு நடுநிலையோடு இல்லாமல் கேரளாவிற்கு மறைமுக ஆதரவு தெரிவித்து வருவது ஏன்? மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு, கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான  கூட்டணி அரசை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கமா? கேரளத்தில் தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஒரே ஒரு உறுப்பினர் பலத்துடன் இருப்பதால் அங்கு சமீபத்தில் நடைபெற உள்ள ஒரு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிட்டால் ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் பலமும் சமமாகி அதன் பின்பு காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்ற அச்சம் இருப்பதால் அந்த அரசைக் காப்பாற்ற துடிக்கிறதா மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு?

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கினால், அதைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயக்கடமை மத்திய அமைச்சரவைக்கு (நிர்வாகத்திற்கு) உண்டு ஒருவேளை, அந்தத் தீர்ப்பு இன்றைய காலச்சுழ்நிலைக்கு ஏற்ப சமுதாய நலனுக்கு எதிராக இருப்பதாகத் தோன்றினால் அதற்கு மாற்றாக புதிய சட்ட திருத்தத்தை நிறைவேற்றித் தரக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு. அப்படி நிறைவேற்றாத நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைக்கொண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் அவமதிக்கப்படுவதற்கு மைய அரசு இடம் தரவே கூடாது. அப்படி எந்த மாநில சட்டமன்றமாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்தால் அந்த அரசை நீக்கக்கூடிய அரசமைப்பு சட்டவிதி 356-ஐ மத்திய அரசு பயன்படுத்த வேண்டும். இவற்றையெல்லாம் நடுநிலைக் கண்ணோட்டத்தோடு சிந்திக்காமல், காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கேரள காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே ஓரவஞ்சனையாக நடப்பது அநீதியிலும் அநீதி ஆகும். இது நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்திற்குரியதாகும். 

தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை எல்லாம் பறிகொடுக்க காரணமாக இருந்த கருணாநிதி, எதிலும் தாமதமாக முடிவு எடுக்கும் மத்திய அரசு, முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் தாமதத்தை மேற்கொள்ளாமல், நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். இலக்கிய வசனம் பேசி நாடகம் ஆடுவதில் வல்லவர் கருணாநிதி என்பதை இந்த நாடே நன்கறியும். 

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் பொறுத்தமட்டில், தி.மு.க. கூட்டணிக் கட்சியாக மைய அரசில் இடம்பெற்று இருப்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று தனக்குத்தானே கருதிக்கொண்டு, ஒரு மைய அரசுக்கும் தி.மு.க.வின் மைய அமைச்சர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததுபோல் இப்போது உண்ணாநோன்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் கருணாநிதி. உண்மையிலேயே தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசியல் தலைவர்தான் என்றால், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கக்கூடாது என்று மைய அரசை நடத்தும் காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்து இருக்க வேண்டாமா? கேரள அரசுக்கு சார்பாக காங்கிரஸ் அரசு நீடிப்பதற்காகவே தங்கள் அளவில் நாடகம் ஆடும் காங்கிரஸ் ஆட்சியாளர்களைக் கண்டித்து நீங்கள் தமிழ்நாட்டுக்கு பகையாக நடப்பதால், உங்கள் கூட்டணி ஆட்சியில் இருந்து இந்த தி.மு.க. வெளியேறுகிறது என்ற அறைகூவலை அல்லவா கருணாநிதி விடுத்திருக்க வேண்டும்!

அப்படி அறிவிக்கும் அரசியல் துணிவு கருணாநிதிக்கு உண்டா? தமிழ் இனத்துக்கு என்று ஒரு தனி ஈழ ஆட்சி நடைபெறதபடி சிங்கள சர்வாதிகாரி ராஜபக்சேவுக்கு துணை போகிற காங்கிரஸ் ஆட்சியாளர்களை ஆதரித்தவர்தானே கருணாநிதி. அப்போதுகூட கடற்கரையில் மனைவியோடும், துணைவியோடும் ஏறத்தாழ சுமார் 3 மணி நேரம் மட்டுமே உண்ணாநோன்பு இருப்பதாக நாடகம் ஆடியவர்தானே இந்த கருணாநிதி

எனவே உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கிவரும் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசமைப்புச் சட்டப்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க அரசியல் துணிவுடன் செயல்பட முன்வருமா? அல்லது கேரள காங்கிரஸ் ஓட்டு வங்கிக்காக இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்த வழிவகுக்குமா? இதுவே தமிழ்நாட்டு மக்களின் இன்றைய கேள்வி. மத்திய ஆட்சியாளர்களே பதில்சொல்லுங்கள்...

எஸ்.முத்துமணி

மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony