முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேற்று அதிகாலை 3 மாவட்டங்களில் நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சேலம் நவ. 30 -  சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி   மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி விட்டது. 3 மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்று அதிகாலை 3​50 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது வேகமான சத்தத்துடன் சூறாவளி காற்று வீசியது. ஆடுகள், மாடுகள்  பெருத்த ஓசையுடன் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓடியதால் பயந்துபோன  பொதுமக்கள் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர். கிருஷ்ணகிரி பகுதியில் நிலநடுக்கம் 3.3 என பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட குள்ளாத்திராம் பட்டி, குருக்கலையனூர், மஞ்சார அள்ளி, ஈச்சூர், நாகமறை, ராமகுண்ட அள்ளி, மத்தாளபள்ளம், ஏரியூர், நெருப்ர், பெரும்பாலை, ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வெடி வெடிப்பது போன்ற சத்தம் போல் கேட்டது. 

மேலும் இந்தபகுதியில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் ஆண்களும், பெண்களும் அலறி அடித்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்தனர். சிலர் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடி வந்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளி சாலையில் நின்றனர். சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

கிராமங்களில் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த ஆடு, மாடுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடின. அவை சத்தம் போட்டுக் கொண்டு ஓடியதால் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் வெளியே ஓடி வந்து பார்த்த போது தான் சிலருக்கு நில நடுக்கம் ஏற்பட்ட தகவல் தெரிந்தது. சில கிராமங்களில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நாய்கள் ஊளையிட்டுக்கொண்டு ஓடி உள்ளன. 

இந்த சத்தத்தை கேட்டு சிலர் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அப்போது சூறாவளி காற்று அடித்ததால் எப்படி சத்தம் வருமோ அது போல நிலநடுக்க சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்

ஈச்சூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவரது ஓட்டு வீட்டில் 4 இடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பேருராட்சிக்குட்பட்ட சாம்ராஜ்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், மற்றும்  மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளான கூனாண்டியூர், கீரைக்காரனூர், மற்றும் பொட்டனேரி, அரங்கனூர், வெள்ளார் பேரூ ராட்சிக்குட்பட்ட எருமப்பட்டி, நங்கவள்ளி, வனவாசி,ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நில நடுக்கம் 5 முதல் 8நொடிகள் வரை இருந்தது. . நில நடுக்கம் ஏற்பட்ட போது கட்டில் குலுங்கியது. பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கொட்டும் பனியிலும் வீட்டுக்கு வெளியே ரோடுகளில் நின்றனர். நிலநடுக்கத்தினால் நங்கவள்ளி அருகே தாச காப்பட்டியில் முனியப்பன் என்பவரது வீட்டில் விரிசல் ஏற்பட்டது. 

மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் அருகே கூத்தனூரில் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் நிலநடுக்கத்தால் உராய்ந்து இடி சத்தம் போல கேட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், கோவிந்தப்பாடி, குருமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. அதிகாலை 4 மணிக்கு முன்பு நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் காலை 8 மணி வரை பெண்களும், ஆண்களும் நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பீதியில் அவர்கள் தெருவில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்ல பயந்தனர். மீண்டும் நில நடுக்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். தாரமங்கலத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில் போவது போல் திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருட்கள் குலுங்கியது. 

இதனால் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். ஆனால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டி, சின்ன திருப்பதி, ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்