சென்னை – தூத்துக்குடிக்கு கூடுதல் விமானசேவை தொடக்கம்

புதன்கிழமை, 22 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு புதியதாக கூடுதல் விமானசேவை துவங்கப்பட்டுள்ளது. இது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.புதுக்கோட்டை அருகேயுள்ள வாகைக்குளத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னைக்கு மட்டும் பகல் நேரங்களில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் காலை, மாலை என இருநேரங்களில் மட்டுமே விமான சேவை நடைபெற்று வருகிறது. சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனமான ‘’ஸ்பைஸ்ஜெட்’’ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமான சேவை மூலமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் கூடுதல் விமான சேவையை துவங்கவேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும் வந்தது. பயணிகளின் இந்த கனவு தற்போது நனவாகியுள்ளது.அதாவது கோவையை சேர்ந்த ஏர் கார்னிவெல் என்ற நிறுவனம் இந்த சென்னை டூ தூத்துக்குடி என்ற புதிய விமான சேவையை நேற்று முதல் துவங்கியுள்ளது. இதற்கான துவக்க விழா நேற்று வாகைக்குளம் விமான நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஏர் கார்னிவெல் லிமிடெட் சிஇஓ மணிஷ்குமார் சிங் தலைமை வகித்தார். தலைமை விமான நிலைய சேவை அதிகாரி கோவிந்த் முன்னிலை வகித்தார். விழாவில், தூத்துக்குடி எஸ்.பி. அஸ்வின்கோட்னீஸ் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கான விமான சேவையினை துவங்கி வைத்தார். விழாவில், விமான நிலைய நிர்வாக அதிகாரி தாஜி, சோதனை அதிகாரிகள், விமான நிலைய பணியாளர்கள் மற்றும் பயணிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.புதியதாக அதுவும் சென்னையில் இருந்து கூடுதலாக துவங்கப்பட்டுள்ள இந்த விமானம் சென்னையில் இருந்து தினமும் மதியம் 2.15மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு 3.50மணிக்கு வரும். மீண்டும் மறுமார்க்கத்தில் இங்கிருந்து 4.15மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 5.50மணிக்கு சென்று சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை மூன்று மாவட்டங்களை சேர்ந்த பயணிகளும் பயன்படுத்திக்கொள்ளுமாறு விமான சேவை நிறுவனத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.நேற்று முதன் முதலாக துவங்கிய இந்த விமான பயணத்தில் சென்னையில் இருந்து 55பயணிகள் தூத்துக்குடிக்கு வந்தனர். சென்னையில் இருந்து வந்து தூத்துக்குடியில் தரைஇறங்கிய விமானத்தினை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீயச்சி அடித்து வரவேற்றனர். முதன் முதலாக சென்னையில் இருந்து வந்த பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள், பணியாளர்கள் ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். நேற்று மட்டும் இந்த விமானம் மாலை 5.10மணிக்கு 47பயணிகளுடன் புறப்பட்டு சென்னை சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: