முக்கிய செய்திகள்

பிளஸ்-2 முடித்தவர்கள் முதுநிலை சித்த மருத்துவம் படிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      மாணவர் பூமி
plus 2

Source: provided

மதிப்பும், மரியாதையும் மிக்கது மருத்துவப்பணி. மாணவர்களின் கனவுக்கல்வி எம்.பி.பி.எஸ்! பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்கள் இப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். எம்.எஸ்., எம்.டி. போன்ற முதுகலை மருத்துவ படிப்புகளும் உள்ளன. இதற்கு தனி நுழைவுத் தேர்வு இருக்கிறது. இத்தேர்வு எழுதாதவர்கள் எச்.ஐ.வி., நியூட்ரிஷியன், அவசர கால மருத்துவம், கிளினிகல் ரிசர்ச் போன்ற ஓராண்டு படிப்புகளை படிக்கலாம். பயோடெக்னாலஜி, மெடிக்கல்நானோ டெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் எம்.டெக். படிப்பும் இருக்கிறது. படித்தவுடன் ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.) மருத்துவம் சார்ந்த படிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது 5 ஆண்டுகால படிப்பு. பல் மருத்துவம், பல் அழகுபடுத்துதல் இதில் முக்கியமானது. இவர்களுக்கு நல்ல பணிவாய்ப்பு இருக்கிறது. படித்து முடித்தவர்கள் சொந்தமாக கிளினிக் நடத்தவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிறார்கள். டென்டல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.

நர்சிங் (செவிலியர்) பணிக்கும் உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளை படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்கு பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு.

ஒரு மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், அதன் குணாதிசயம், பக்க விளைவு பற்றி படிப்பது பார்மஸி (மருந்தாளுனர்). 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு, 4 ஆண்டு பட்டப்படிப்பு இருக்கிறது. மருத்துவத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பை படிப்பவர்களுக்கு மருத்துவமனை, ஆராய்ச்சிக்கூடங்கள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. முதுநிலை பட்டப்படிப்பு முடித்தால் வாய்ப்புகள் ஏராளம். மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு பார்மஸி படித்திருக்க வேண்டும்.
 
இந்தியாவின் இயற்கை மருத்துவத்தைப் பற்றிய படிப்பு சித்தமருத்துவம். உணவுப்பொருளை மருந்தாகப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமுறை இது. தற்போது மதிப்பு பெருகும் மருத்துவமாக இது உள்ளது.

பி.எஸ்.எம்.எஸ். என குறிப்பிடப்பட்டு இம்மருத்துவ பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. தாம்பரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட்டில் முதுநிலை சித்தமருத்துவம் படிக்கலாம். இவர்களுக்கும் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சொந்தமாக மருந்து தயாரித்தும் விற்கலாம்.

பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேதமும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம். பக்க விளைவற்ற இம்மருத்துவ முறைக்கு மவுசு அதிகரித்துள்ளது. 5 ஆண்டு பட்டப்படிப்பு, ஆயுர்வேதிக் பார்மசி என்ற டிப்ளமோ (2 ஆண்டு) படிப்பு இருக்கிறது. நெல்லை, சென்னை அரசு கல்லூரிகளில் படிக்கலாம். ஜெய்ப்பூரில் ஹஆயுர்வேதா நர்சிங் அண்ட் பார்மசி' என்ற ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பும், ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஹடிப்ளமோ இன் ஹெர்பல் மெடிசின்' என்ற ஓராண்டு படிப்பும் கற்பிக்கப்படுகிறது.

 
மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதன் மர்மத்தை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பது இதன் பணி. எந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.

கண் குறைபாடுகளை அறிவதும், களைவதும் பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகள் உள்ளன. பணிவாய்ப்புகளும் தாராளம்.  பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவ படிப்பு ஆடியாலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம் படுத்தி முறைப்படுத்தும் ஹஸ்பீச் தெரபி' படிப்பும் உள்ளது. உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது ரேடியோகிராபி படிப்பு. ரேடியோ தெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
 
மெடிக்கல் லேப் டெக்னாலஜி மருத்துவ துறையில் முக்கியமான படிப்பு. நோயை கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்பு (பி.எம்.எல்.டி.) கள் உள்ளன. மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்களில் பணிவாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது.

இவை தவிர மருத்துவதுறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் ஏராளம் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: