கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கைத்தறி கண்காட்சி வருவாய் அலுவலர் சோ.இளங்கோ துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      கன்னியாகுமரி
handloom expo

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ , கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சியினை  நாகர்கோவில், இராமவர்மபுரத்தில் அமைந்துள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் ரிப்பன் வெட்டி, திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

கைத்தறி கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 21.12.2017 முதல் 03.01.2018 முடிய அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சியினை சிறப்பாக நடத்திட, இந்திய ஜவுளித்துறை மற்றும் தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதனடிப்படையில், இச்சிறப்பு கைத்தறி கண்காட்சியினை 21.12.2017 முதல் 03.01.2018 முடிய 14 தினங்கள் நாகர்கோவில் சரகத்தில் நடத்திட கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர், சென்னை அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, வரும் கைத்தறி ஜவுளிகளையும், புதிய இரக ஜவுளிகளையும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தி, உடனுக்குடன் விற்பனை செய்யும் பொருட்டும், இதனால் நெசவாளர்களுக்கு தொடர்ந்து தொழில் வழங்கி, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும், இதுபோன்ற சிறப்பு கைத்தறி கண்காட்சிகளை நடத்திட மத்திய, மாநில அரசுகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில், இராமவர்மபுரம், கோபாலபிள்ளை மருத்துவமனையில் எதிரில் அமைந்துள்ள ‘சுமங்கலி திருமண மண்டபத்தில்” 21.12.2017 முதல் 03.01.2018 முடிய 14 தினங்களுக்கு மாநில அளவிலான அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் 30 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் தமிழகத்தின் இதரப் பகுதிகளில் இருந்தும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர். இக்கண்காட்சியில் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், பருத்திரக சேலைகள், பாலிகாட்டன் சேலைகள், கோரா சேலைகள், பட்டு வேட்டிகள், காட்டன் வேட்டிகள், படுக்கை விரிப்புகள், பெட்சீட்கள், தலையணை உறைகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், டர்க்கி டவ்வல்கள், கேரள செட்முண்டு உட்பட ஏராளமான கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் ரூ.40 இலட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த வருடம் 30.12.2016  முதல் 11.01.2017 முடிய இம்மண்டபத்தில் வைத்து நடைபெற்ற மாநில அளவிலான அரசு சிறப்பு கைத்தறி கண்காட்சியில் ரூ.60.82 இலட்சம் மதிப்புள்ள ஜவுளிகள் விற்பனையாகியுள்ளது.  இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ஜவுளிகளுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த கண்காட்சியினை பார்வையிடவும், கைத்தறி பொருட்களை வாங்கவும் முன்வர வேண்டும் என  மாவட்ட வருவாய் அலுவலர்  சோ.இளங்கோ  தெரிவித்தார்.           முன்னதாக கைத்தறி கண்காட்சியில் இடம் பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.   இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (கைத்தறி மற்றும் துணிநூல் துறை)  ராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து