முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்னமனூர் வட்டார பகுதிகளில் ஜப்பானிய தொழி;ல் நுட்பத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      தேனி
Image Unavailable

    தேனி -தேனி மாவட்டம் சின்னமனூர் வட்டார பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ம.பல்லவி பல்தேவ்,   திம்மிநாயக்கன்பட்டி மற்றும் பொட்டிப்புரம் 18-ஆம் கால்வாய் பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை   துவக்கி வைத்தார்.
    மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மரக்கன்றுகளை நடவு செய்து தெரிவிக்கையில்:-
    நமது மாவட்டத்தில் பரவலாக தற்போது மழை பொழிந்து வருகிறது. இச்சமயத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் போது அவை நன்கு வளர்வதற்கான சூழ்நிலை உள்ளது. திம்மிநாயக்கன்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட துர்க்கையம்மன் கண்மாயில் 1 ஏக்கர் நிலத்தில் 10,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     ஜப்பான் நாட்டில் வசிக்கும்  அஹிரா மியா வாக்கி (வயது 90) என்பவர் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் நெருக்கமாக அதிக மரங்களை நட்டு வளர்த்தால், அப்பகுதியில் மழை பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதை கண்டறிந்து செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் இம்முறை கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
    அதன் தொடர்ச்சியாக, நமது மாவட்டத்தில் சீத்தா, நீர்மருது, மயில்கொன்றை, வேங்கை, தூங்குமூஞ்சி, சரக்கொன்றை, வில்வம், குண்டுமணி, அத்தி, நெல்லி, மா, நாவல், தேக்கு, வாகை, புளி, பூவரசு, புங்கன், அரைநெல்லி, கருவாகை போன்ற 19 வகையான மரக்கன்றுகள் நெருக்கமாக நடவு செய்யப்படுகிறது. இதன் மூலம் பசுமை போர்வை வெளி அதிகரிப்பதுடன் பல்வேறு வகையான உயிரினங்களுக்கு இருப்பிடமாகவும், இங்கு விளையும் கனிகள் சுவையானதாகவும் இருக்கும்.
    மேலும், பொட்டிப்புரம் ஊராட்சிக்குட்பட்ட 18-ஆம் கால்வாய் நீட்டிப்புப் பகுதிகளில் 4 கி.மீ நீளத்திற்கு 1400 பனை மரங்கள் நடவு செய்யப்படுகிறது. இதன் மூலம் மண் கெட்டித்தன்மை அடைவதுடன் நிலத்தடி நீர்மட்டத்தினையும் பாதுகாக்கலாம்.
    அதனைத்தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்து முறையாக பராமரித்திட அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பதியம் செய்து வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்து சுத்தமான, சுகாதாரமான சுற்றுப்புறச் சூழ்நிலையினை ஏற்படுத்திடவும், புவி வெப்பமாதலை தடுத்திடவும், மழைப்பொழிவை ஏற்படுத்திடவும் தங்களது பங்களிப்பினை செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
    இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) சி.தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்;ச்சி முகமையின் திட்ட அலுவலர் பா.திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள், பாண்டி, உதவி பொறியாளர் கார்த்திக் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து