முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் காற்று மாசு குறித்து பீதியடைய தேவையில்லை: அமைச்சர் உதயகுமார் விளக்கம்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் பொதுமக்கள் காற்று மாசு தொடர்பாக எந்தவித அச்சமோ பீதியோ அடைய தேவையில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

காற்றின் மாசு குறித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங்பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், மாசுகட்டுப்பாட்டு செயலாளர் சேகர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தலைமை பொறியாளர் செல்வம், சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி, ஐ.ஐ.டி.பேராசிரியர் சிவ நாகேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் இந்த பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்,

காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படுகிற போது, சூரியக் கதிர்கள் முழுமையாக உள்ளே வருவதற்கு வாய்ப்புகள் இருக்காது. அதே போல, கடல் காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, கட்டுமானப் பணிகளின்போது ஏற்படும் தூசு உள்ளிட்ட பல்வேறு காரணாங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் தமிழகத்தில் 28 மாசுக் கட்டுப்பாடு தர ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சென்னையில் மட்டும் 8, கோவையில் 3, மதுரையில் 3, சேலத்தில் 1, திருச்சியில் 5, தூத்துக்குடியில் 3, மேட்டூர் 2, கடலூர் 3 என 28இடங்களில் அமைந்துள்ளன. காற்றின் தரத்தைக் கண்டறிவதற்கான அளவுகோலாக 0-50 வரை இருந்தால் நன்றாக இருக்கிறது எனவும், 51-100 வரை இருந்தால் போதுமானது எனவும், 101-200 வரை இருந்தால் மிதமானது எனவும், 201-300 வரை இருந்தால் மோசமானதாக இருக்கிறது என்றும், 301-400 வரை இருந்தால் மிக மோசமானது எனவும், 401-500 வரை இருந்தால் தீவிரமாகவும், 501-க்கு மேல் இருந்தால் மிகத் தீவிரம் அல்லது அவசர காலநிலை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்லா நிலையங்களிலும் இது குறித்த தகவல்களை வருவாய் நிர்வாக ஆணையர் சேமித்தார். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள எல்லா நிலையங்களிலும் மோசமான நிலை இல்லை. 1- 2 இடங்களில் மோசமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல,சிறப்பாக இருக்கும் நிலையங்கள் குறித்த புள்ளி விவரங்களும் கிடைத்திருக்கின்றன. இது குறித்து மக்கள் பயப்பட வேண்டாம். மருத்துவமனைகளில், சுவாசக் கோளாறுகள் சம்பந்தமாக மக்கள் சிகிச்சைக்கு வந்திருக்கிறார்களா என சுகாதாரத் துறையிடம் கேட்டோம். குறிப்பாக சென்னையில் வந்திருக்கிறதா என கேட்டோம். காற்று மாசால் சுவாசக் கோளாறுகள் வந்திருப்பதாக யாரும் சிகிச்சைக்கு வரவில்லை என சுகாதாரத்துறை நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறது. ஆனால், பருவ காலங்களில் ஏற்படும் சளி உள்ளிட்டவற்றால் ஏற்படும் மூச்சுக் கோளாறுகளுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன எனத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். 2-3 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்த நிலை இப்போது இல்லை. படிப்படியாக மாறி வருகிறது. ஆகவே, பொதுமக்கள் காற்று மாசு தொடர்பாக எந்தவித அச்சமோ பீதியோ அடைய தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து