இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2019      தமிழகம்
cm edapadi palanisamy 2019 10 15

சென்னை : பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி48 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் நேற்று முன்தினம் (டிச.11) மாலை விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக் கோளுடன் சேர்ந்து ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக் கோள், அமெரிக்காவின் 6 செயற்கைக் கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் வர்த்தக ரீதியில் விண்ணில் ஏவப்பட்டன. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 75-வது ராக்கெட் ஏவப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்த தருணத்தில் இதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி. இஸ்ரோவின் கடந்த கால மற்றும் நிகழ்கால முன்னோடிகளால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் ஆய்வு போன்றவற்றிற்காக 11.12.2019 அன்று, 50-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்ட நிகழ்வு, இந்திய திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.  பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர். பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.இந்தச் சாதனை இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தி, அவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும். இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்பல சாதனைகள் படைத்து, நம் தாய்திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட இத்தருணத்தில் என் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து