Idhayam Matrimony

மின்சாரத்தின் தேவை குறைந்து உள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி குறைப்பு: எரிசக்தி துறை அதிகாரிகள் தகவல்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையம், நீர்மின் நிலையம், கியாஸ் மின்நிலையம் மற்றும் சீசன் காலங்களில் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. 

இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 4 ஆயிரத்து 320 மெகாவாட், நீர்மின் 2,321 மெகாவாட், கியாஸ் மின் 516 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். இதுதவிர காற்றாலைகள் மூலம் 8 ஆயிரத்து 552 மெகாவாட் மற்றும் சூரிய சக்தி மூலம் 4 ஆயிரத்து 315 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. 

மேலும் மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரத்து 192 மெகாவாட் வழங்க வேண்டும். ஆனால் சராசரியாக தற்போது 4 ஆயிரத்து 597 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது. 

இதுதவிர தனியாரிடமும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. சூரியசக்தி மூலம் சராசரியாக தற்போது 1,500 மெகாவாட் வீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனாவுக்கு முன்பு வரை கடந்த ஆண்டு 15 ஆயிரம் மெகாவாட் வரை மின்சார பயன்பாடு இருந்து வந்தது. ஆனால் தற்போது மின்சாரத்தின் தேவை வெகுவாக குறைந்து உள்ளது. குறிப்பாக மழை மற்றும் பனிக்காலங்களில் மின்சாரத்தின் தேவை குறைவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வெகுவாக குறைந்து உள்ளது.

கடந்த 3 நாட்களாகவே அதிகாலை வேளையில் 6 ஆயிரத்து 800 என்ற அளவில் தான் மின்சார பயன்பாடு இருந்து வருகிறது.குறிப்பாக நேற்று முன் தினம் அதிகாலை 3.40 மணி அளவில் 6 ஆயிரத்து 879 மெகாவாட்டும், காலை 7.50 மணி அளவில் 9 ஆயிரத்து 83 மெகாவாட் என்ற அளவிலேயே தான் பயன்பாடு இருந்தது. இதில் 1,500 மெகாவாட் மின்சாரம் சூரியசக்தி மூலமும், 500 மெகாவாட் காற்றாலை மூலமும் கிடைத்து வருகிறது. 

இதனால் 2 ஆயிரம் மெகாவாட் வரை மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வந்த அனல் மின்நிலையங்களில் 400 மெகாவாட் என்ற அளவில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டு உள்ளது. 

கோடைக்காலம் தொடங்கி விட்டால் நிலைமை தலை கீழாக மாறிவிடும். தற்போது இருப்பதை விட 2 மடங்கு அதிகரிக்க கூடும். அப்போது அனல் மின்நிலையங்கள் முழு அளவு உற்பத்தியை பெரும் வகையில் இயக்கப்படும். தற்போது போதுமான மின்சாரம் உற்பத்தி இருப்பதால் எங்கும் மின்சார தடை செய்யப்படுவதில்லை. தொடர்ந்து மிகை மின்மாநிலம் என்ற நிலையில் தான் தமிழகம் இருந்து வருகிறது. 

மேற்கண்ட தகவல்களை எரிசக்தி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து