முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்னடத்தை அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் 30 பேர் விடுதலை

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      தமிழகம்
Puzhal-Jail 2022--09-24

Source: provided

புழல் : நன்னடத்தை அடிப்படையில் தமிழகத்தில் புழல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் 30 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளில் தண்டனை பெற்ற கைதிகளில் தகுதியானவர்களை அடையாளம் காணும் விதிகள் வகுக்கப்பட்டன.

இதில், 10 ஆண்டு சிறையில் உள்ளவர்களில், நன்னடத்தையுடன் கூடிய கைதிகளை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் என பிரித்து, முன்கூட்டியே விடுதலை செய்வதற்கானவர்கள் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 9 மத்திய சிறைகளில் தேர்வான கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக, புழல் மத்திய சிறையில் நேற்று காலை 12 கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு மளிகை தொகுப்பு பொருட்கள், வேலை பார்த்த ஊதியத்தை சிறை அதிகாரிகள் வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும் பரிந்துரை செய்யப்பட்ட பிற கைதிகள் இன்னும் சில நாட்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என புழல் சிறைத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் நேற்று திருச்சி சிறைகளிலிருந்து மொத்தம் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அந்த வகையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை ஆண் கைதிகள் ராஜா, சுந்தர்ராஜன், சாமிநாதன், ராமதாஸ், சின்னத்தம்பி, நாகேந்திரன், ரமேஷ், நாகராஜ், சுதாகர், ரஞ்சித்குமார், பச்சையப்பன், சாமிதுரை ஆகிய 12 பேரும் திருச்சி மகளிர் சிறையில் இருந்து 2 பேரும் என 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து 4 பேர் சேர்த்து திருச்சி மண்டலத்தில் மொத்தம் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சிறைக் கைதிகள் யாரும் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படாத நிலையில் இந்தாண்டு திருச்சி மண்டலத்தில் மொத்தம் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து