1800 ஆண்டுகள் பழமையான பிரியாணியின் வரலாறும் - அதன் வகைகளும்

திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2017      வாழ்வியல் பூமி
biriyani

Source: provided

பிரியாணியின் வரலாற்றை பற்றி ஆராய்ந்தால் அது நம்மை கி.பி 2-ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது. அதாவது அந்தக் காலங்களில் அரிசி, இறைச்சி, நெய், மஞ்சள், கொத்துமல்லி தூள், மிளகு, புன்னை இலை ஆகியவற்றை சேர்த்து செய்யப்பட்ட 'ஊன் சோறு' எனும் உணவு வகை இன்றைய பிரியாணியோடு ஒத்துப்போகிறது. இதைத் தவிர்த்து பார்த்தால் பிரியாணியின் தோற்றம் குறித்தும், அது இந்தியா வந்து சேர்ந்த விதம் பற்றியும் நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. இவற்றில் பரவலாக நம்பப்படும் கருத்து, பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் 'பிர்யான்' எனும் பாரசீகச் சொல்லிலிருந்து பிறந்ததாக சொல்லப்படுவது.

அதாவது பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்து, பின்னர் பிரியாணி சமைக்கும் முறை இந்தியாவில் உருவானது. அந்த வகையில் இந்தியாவில் பிரியாணிக்காக பிரசித்தமாக அறியப்படும் சில இடங்களை பற்றி இங்கே காண்போம்.

ஹைதராபாத் பிரியாணி : இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பெரும்பாலும் அசைவப் பிரியர்கள் அனைவராலும் ஹைதராபாத் பிரியாணி விரும்பப்படுகிறது. இந்திய சமையல் பாணியின் அங்கமாகக் கருதப்படும் ஹைதராபாத் பிரியாணி முன்பு நிஜாம் அரண்மனை சமையலறையில் மீன், காடை, இறால், மான் மற்றும் முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரியாணி உலகப் பிரபலம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் பிரியாணி உணவகங்களை பார்க்க முடிகிறது.

திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி : உலகம் முழுக்க ஒரு பிரியாணிக்கு மவுசு இருக்குன்னா அது கண்டிப்பா தலப்பாக்கட்டு பிரியாணிதாங்க. இந்த தலப்பாக்கட்டு பிரியாணி உணவகத்துக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் இருப்பதோடு, இது தோன்றிய இடமான திண்டுக்கல்லில் தலப்பாக்கட்டு நாயுடு கடை என்று லேன்ட் மார்க் மூலம் பிரபலமாக அறியப்படுகிறது. திண்டுக்கல் தலப்பாக்கட்டியில் மற்ற உணவகங்களை போல் அல்லாமல் சீரகசம்பாவில் பிரியாணி செய்கிறார்கள். இது மசாலா பொருட்களின் சுவையினை முழுவதுமாக உறிஞ்சிக்கொள்வதால் ருசி பிரமாதமாக இருக்கிறது. அதோடு சுவைமிக்க கன்னிவாடி ஆட்டு இறைச்சி வேறு!... சொல்லவா வேணும்….

தலச்சேரி பிரியாணி: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் பிரபலமாக அறியப்படும் தலச்சேரி பிரியாணி மலபார் பிரியாணி, கோழிக்கோடு பிரியாணி, கண்ணூர் பிரியாணி, கேரளா பிரியாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணி தலச்சேரி மட்டுமல்லாமல் கேரளாவின் பிற பகுதிகளான மலப்புரம், காசர்கோட், கோழிக்கோடு ஆகிய மலபார் பகுதிகளிலும் பிரபலம்.

ஆம்பூர் பிரியாணி: தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் பின்பற்றப்படும் செய்முறை ஆம்பூர் பிரியாணி எனப் பெயர் பெற்றுள்ளது. இது தமிழ்நாடு தவிர ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைப் பிரதேசங்களிலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பிரியாணியில் ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருக்கும்.

லக்னோ ஆவாதி பிரியாணி: லக்னோவுக்கும், பிரியாணிக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதாவது பிரியாணி வகைகளில் லக்னோ பிரியாணிதான் முதலாவகதாக உருவானது என்று நம்பப்படுகிறது. லக்னோ மற்றும் ஒரு சில உத்தரப் பிரதேச பகுதிகளில் பேசப்படும் அவதி மொழியிலிருந்து ஆவாதி பிரியாணி எனப் இந்த பிரியாணிக்கு பெயர் வந்தது. இது புக்கா பிரியாணி என்று பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணியை தவிர லக்னோ கபாப் இந்தியா முழுவதும் பிரபலம.

வாணியம்பாடி பிரியாணி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் வாணியம்பாடி பிரியாணி முழுக்க முழுக்க முகாலய உணவு முறையை பின்பற்றி செய்யப்படுகிறது. அதாவது வேலூர் பகுதியை முன்பு ஆண்ட ஆற்காடு நவாப் அரசு, படை வீரர்களுக்கு முகாலய பிரியாணியை சமைத்து பரிமாறியது. எனவே அதற்கு பின்பு வேலூரின் நிறைய பகுதிகளில் சமைக்கப்பட்டு வந்த இந்த பிரியாணி, வாணியம்பாடி பகுதியிலும் சமைக்கப்பட்டதுடன், வாணியம்பாடி பிரியாணி என்ற அளவிலேயே பிரபலமாக தொடங்கியது.

கொல்கத்தா பிரியாணி: லக்னோ பாணி பிரியாணியிலிருந்தே கொல்கத்தா பிரியாணி தோன்றியது. அதாவது 19ம் நூற்றாண்டின் போது லக்னோவை விட்டு வெளியேறிய வஜீத் அலி ஷா எனும் நவாப் தன்னுடனேயே அவருடைய தலைமை சமையல்காரரையும் அழைத்து வந்துவிட்டார். இதன் மூலம் லக்னோ பிரியாணி கொல்கத்தா பகுதிகளுக்கே சிறிது மாற்றம் அடைந்து கொல்கத்தா பிரியாணி என்றானது. இந்த பிரியாணியை மற்ற பிரியாணி வகைகளோடு ஒப்பிட்டால் சற்று காரம் குறைவாகவே இது தயாரிக்கப்படுகிறது.

சங்கரன்கோவில் பிரியாணி: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் செய்யப்படும் ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பிரபலம். இந்த பிரியாணி தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

பாம்பே பிரியாணி: பாம்பே பிரியாணி மும்பையில் உள்ள ஒரு பகுதி இஸ்லாமிய சமூக மக்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை பிரியாணியில் இறைச்சியுடன் உருளைக்கிழங்கும் சேர்த்து சமைக்கப்படுவது வித்தியாசமான சுவையை தருவதோடு, பாம்பே பிரியாணியின் தனிச் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது.

பட்கல் பிரியாணி: கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பட்கல் பகுதியில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி செய்யும் முறை கடலோர கர்நாடகத்தில் புகழ் பெற்றுள்ளது. இது பம்பாய் பிரியாணியை பின்பற்றி தயாரிக்கப்படுகிறது. இந்த பிரியாணியில் பிற பிரியாணி வகைகளுக்கு மாறாக வெங்காயம் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

பிரியாணி கிராமம் : இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரியாணியின் பெயரால் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள வடக்கம்பட்டி பிரியாணி கிராமம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி நளபாக சக்கரவர்த்திகளாக திகழ்ந்திடும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து வடக்கம்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு .முனியாண்டி சுவாமிகளுக்கு ஆண்டுதோறும் பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.

அப்போது சுவாமிக்கு நூற்றுக் கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு ராட்சத அண்டாக்களில் பிரியாணி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகேயுள்ள வடக்கம்பட்டி,பிரியாணி கிராமம் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படுகிறது.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: