முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தியாகதலைவி என்பது ஜானகிராமச்சந்திரனுக்கே பொருந்தும் போடியில் தலைமை கழக பேச்சாளர் வடுகை சுந்தரபாண்டியன் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      தேனி
Image Unavailable

போடி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றிய கழகம் சார்பில் கழக 47வது துவக்க விழா பொதுக்கூட்டம் கோடாங்கிபட்டியில் நேற்று முன்தினம்  நடைபெற்றது. 
மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வரலாற்று சிறப்புமிக்க தொகுதியாகும். காரணம் புரட்சித்தலைவர் மறைவுக்கு பின் அதிமுக பிளவுபட்டபோது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போடி தொகுதியிலே போட்டியிட்டார். அவரை இத்தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்ததன் காரணமாக ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை முதல் எதிர்கட்சி தலைவராக உருவாக்கி மாபெரும் நமது இயக்கத்தை வலுபெற செய்தனர். தற்போது நமது கழகத்தின் ஒன்றரை கோடி உறுப்பினர்களின் பாதுகாவலனாக இருக்கின்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளீர்கள். என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது, நமது கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களில் இப்பகுதியை சேர்ந்தவர்கள் உட்பட பலர் மீண்டும் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய வேண்டுமென்று கழக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் பலர் வர தயாராக உள்ளனர் என்றார்.
 கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் பேசும்போது, நமது கழகம் மட்டுமே மக்கள் கட்சியாக உள்ளது. ஊழல் கட்சி என மக்களால் முத்திரை குத்தப்பட்ட கட்சி திமுக. காங்கிரஸ் செல்லாத கட்சியாகிவிட்டது. மற்ற தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நம் கழகத்தோடு கூட்டணி வைத்ததால் தான் அக்கட்சிகளுக்கு  அங்கீகாரமே கிடைத்தது. இக்கட்சியினர் தனியாக நின்று வெற்றி பெற முடியாது. தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களை ஏமாற்றியதுபோல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றார். 
தலைமை கழக பேச்சாளர் வடுகை சுந்தரபாண்டியன் பேசும்போது புரட்சித்தலைவர்  கழகத்தை துவக்கியபோது நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலின் போது கருணாநிதி வேட்பாளரை அறிவித்து விட்டு எம்.ஜி.ஆருக்கு வேட்பாளரை அறிவிக்க தெம்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்ப எம்.ஜி.ஆர் மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார். மாயத்தேவரின் வெற்றிக்காக கழக தொண்டர்கள் பட்ட கஷ்டம் அதிகம். அதே நேரத்தில் அந்த சோதனைகளை எல்லாம் தாங்கி வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டனர். மாயத்தேவர் 1,80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர்  அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தல்களில் 126, 129, 131 என தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவருடைய மறைவுக்கு பின்  கழகம் இரண்டாக உடைந்தது. பின் கட்சியை வழிநடத்தும் திறமை, தகுதி புரட்சித்தலைவியிடமே உள்ளது என்று பிரிந்து இருந்த கழகத்தை ஒன்று சேர்த்து தன்னை விலக்கி கொண்ட ஜானகிராமச்சந்திரனே உண்மையான தியாக தலைவி என்றார். பின்னர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் அம்மா அவர்களின் தலைமையின் கீழ் 1991ல் 162, 2001ல் 141, 2011ல் 200, 2016ல் 136 என கழகத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் பேசும்போது  என்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு புரட்சித்தலைவி அம்மாவே முக்கிய காரணம். நமது கழகத்தை காத்திட புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகயோரின் ஆன்மாக்கள் உறுதுணையாக இருக்கும். கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கழகத்தையும், ஆட்சியையும் பல்வேறு சத்திய சோதனைகளை தாண்டி  சிறப்பாக வழிநடத்துகின்றனர். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மயிலைபரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் தேனி ஆர்.டி.கணேசன்,  பெரியகுளம் அன்னபிரகாஷ், கடமலை-மயிலை கொத்தாளமுத்து, உத்தமபாளையம் அழகுராஜ், சின்னமனூர் விமலேஸ்வரன், நகர் கழக செயலாளர்கள் பெரியகுளம் என்.வி.ராதா, போடிநாயக்கனூர் பழனிராஜ், சின்னமனூர் கண்ணம்மா கார்டன் ராஜேந்திரன், கம்பம் ஜெகதீஸ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தலைவர் குருமணி,  மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாலசந்திரன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி,  மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ராஜகோபால், இணை செயலாளர் முத்துக்குமார்,  மாவட்ட பாசறை துணை செயலாளர் முருகேசன், கழக பிரமுகர் குருசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து