முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழகம் துணை நிற்கும்: முதல்வர் உறுதி

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கொரோனா அலையை நிர்வகிப்பதில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழகம் துணை நிற்கும் என்று பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, முதல்வர்  மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

கொரோனா தொற்றுநோயின் ஒமைக்ரான் அலையை நிர்வகிக்க தமிழகம் முழுமையாக தயார் நிலையில் உள்ளளது.  தமது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று வரை தகுதியுள்ளவர்களில் 64 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. 

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கோவிட் பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழகத்தில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதாகவும், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையை மட்டுமே பயன்படுத்துவதாகவும்ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளையும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். 

கோவிட் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க அனைத்துத் அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. இறுதியாக, இந்த கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழகம் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.  தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர்  முனைவர்.பி. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து