முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு : பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 அக்டோபர் 2025      தமிழகம்
Vijay-2025-09-20

Source: provided

சென்னை : பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதிய விவகாரத்தில் விஜய் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் கடந்த மாதம் 13-ந்தேதி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். சனிக்கிழமைகள்தோறும் பிரசாரம் செய்ய திட்டமிட்ட அவர் அதற்கு அடுத்த வாரம் 20-ந்தேதி நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். 3-வது வாரமாக கடந்த 27-ந்தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இன்னொரு நிர்வாகியான நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டது.கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இருவரும் தலைமறைவாக உள்ளனர். 2 பேரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடியான நிலையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை குறிப்பிட்டு அதுபோன்று இனி வரும் காலங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய சம்பவத்தை குறிப்பிட்டு பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்தார்.

விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் போலீசார் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர். யாரும் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்காமல் போலீசார் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்து அதில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து எந்த இடத்தில் விபத்து நடைபெற்றது என்பது பற்றி போலீ சார் ஆய்வு செய்தனர்.

அப்போது கரூர் வேலாயுதம்பாளையம் சோதனை சாவடி பகுதியில் வைத்து தான் பிரசார வாகனத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதியது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். விஜயின் பிரசார வாகனத்தின் பதிவு எண்களான டி.என்.14 ஏ.எஸ்.0277 என்ற எண் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. டிரைவர் பெயர் இல்லாமல் வாகன டிரைவர் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பல்சர் மற்றும் யமகா மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்து 2 பேர் மோதியதாகவும் எப்.ஐ. ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பி.என்.எஸ். 281 என்கிற சட்டப் பிரிவில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், மற்றவர்களின் உயிருக்கு காயம் ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை கரூர் வேலாயுதம் பாளையம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். கரூர் தவிட்டுப்பாளையம் சோதனை சாவடி அருகில் பணியில் இருந்த ஏட்டு தெய்வ பிரபு அளித்த புகாரின் பேரிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து வேலாயுதம் பாளையம் போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய உள்ளனர்.

கிழக்கு கடற்கரை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரசார வாகனத்தை எப்போது பறிமுதல் செய்யலாம் என்பது பற்றி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று வேலாயுதம்பாளையம் போலீசார் தெரிவித்து உள்ளனர். கரூர் போலீசார் சென்னை வந்து விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக சென்னை மாநகர போலீசாரின் உதவியையும் கரூர் போலீசார் நாடி உள்ளனர். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பிரசார வாகனத்தை பறிமுதல் செய்யும்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து