முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள்பணியாற்றி சாதனை படைத்த முதியவர்

ஒரு நிறுவனம் அல்லது ஒரு கம்பெனியில் நீங்கள் அதிகப்பட்சமாக எத்தனை ஆண்டுகள் வேலை செய்து உள்ளீர்கள்? என்று கேட்டால், நம்மில் பலரும் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஆண்டுகளே சொல்வோம்;ஆனால் பிரேசிலைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேனுக்கு, அவரது பணியிடத்துடனான தொடர்பு மிகவும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.100 வயது மிக்க வால்டர் ஆர்த்மேன் ஒரே நிறுவனத்தின் கீழ் 84 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார். இதுவொரு உலக சாதனையும் ஆகும். ஆம்! இந்த ​​100 வயது மிக்க முதியவர், "ஒரே நிறுவனத்தில் அதிக ஆண்டுகள் வேலை செய்தவர்" என்கிற கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்! 1938 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பிரேசிலில் உள்ள சான்டா கேடரினாவில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் ​​நிறுவனத்தில் 'ஷிப்பிங் அசிஸ்டென்ட்' ஆக பணியாற்றத் தொடங்கிய வால்டர் ஆர்த்மேன், தன் கடின உழைப்பு மற்றும் மன உறுதியின் உதவியுடன் மெல்ல மெல்ல தனக்கான வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார். இப்படியாக 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து சாதனையும் படைத்துள்ளார்.

சேலையை பெண்கள் மட்டும்தான் அணிய வேண்டுமா என்ன...

சேலையை பெண்கள் மட்டும் தான் அணிய வேண்டுமா என்ன, நாங்களும் கட்டி அசத்துவோம்ல என கிளம்பிவிட்டால் மேற்கு வங்க ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். புஷ்பக் சென் என்ற அந்த துடிப்பு மிக்க 26 வயது இளைஞர்தான் தற்போது கொல்கட்டா வீதிகளில் சென்சேஷன். ஆடைகளுக்கு பாலின வேறுபாடு கிடையாது, அது பார்ப்பவரின் தலையில்தான் இருக்கிறது என உறுதிபட சொல்கிறார். தலையில் உச்சி குடுமியும், அடர்ந்த தாடியும், கட்டுமஸ்தான உடலுமாக புஷ்பக் சென், கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் சேலை கட்டி கொல்கத்தா வீதிகளில் நடந்து செல்லும் போது அனைவரின் கண்களும் இவரையே மொய்க்கின்றன. இவர் இத்தோடு விட்டாரா வெளிநாடுகளுக்கு சென்று சேலைகளில் பேஷன் ஷோ, தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போட்டோ ஷூட் என அசத்தி வருகிறார். இவர் சேலையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

2000 ஆண்டுகள் பழமையான கல்லறையில் எழுதப்பட்டிருந்தது பூஜ்யமா?

கர்நாடக மாநிலம் தஷிண கன்னட மாவட்டத்தில் உள்ள கடப்பா தாலுகாவில் ராமகுஞ்சா கிராமத்தில் பாண்டவர் குகை எனப்படும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் கல்லால் ஆன கல்லறை ஒன்று இருப்பதாக உள்ளூர் வாசிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் எம்எஸ்ஆர்எஸ் கல்லூரியின் தொல்லியல் துறை தலைவர் பேரா. முருகேஷி மற்றும் ஆய்வு மாணவர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன கல்லறையை கண்டறிந்தனர். அது மட்டுமின்றி அதன் மேற்புறத்தில் உள்ள கல்லில் வட்ட வடிவில் அல்லது பூஜ்ய வடிவில் எழுதப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது குறித்து முருகேஷி கூறுகையில், அதன் மேற்புறத்தில் காணப்படுவது வட்டமா அல்லது அப்போதே இங்கு வாழ்ந்த மக்கள் பூஜ்யத்தின் பயன்பாடுகளை அறிந்துள்ளனரா என்பது வியப்பாக உள்ளது. இது குறித்து மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு வரலாற்று உண்மைகள் தெரியவரும் என்றார். கற்கால தொல்லியல் எச்சத்தின் மீது எழுதப்பட்டுள்ளது பூஜ்யமா என்ற கேள்வி விஞ்ஞானிகள் மட்டுமின்றி பொது மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே சமயத்தில் 9 பெண்களை திருமணம் செய்த மன்மத ராசா

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. மொடலாக உள்ளார். கடந்த ஆண்டு ஒன்பது பெண்களை கூட்டாக திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இவருக்கு லுவானா கசாகி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. என்றாலும், ஒரு தார மணத்தை எதிர்த்து புரட்சி செய்யவுள்ளதாக அறிவித்து, கடந்த ஆண்டு மேலும் 8 பெண்களை மணந்தார். அந்த மண நிகழ்வில் மனவி லுவானா கசாகியும் இருந்தார். பிரேசிலில் பலதார மணம் சட்டவிரோதமானது. எனவே மற்றைய 8 மனைவிகளுடன் சட்டபூர்வமாக திருமணம் நடக்கவில்லை. திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவிகளில் ஒருவரான அகதா என்பவர் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பல மனைவிகளில் ஒருவராக வாழ விரும்பவில்லையென இப்பொழுது காரணம் கூறியுள்ளார். தற்போதைக்கு புதிதாக யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லையென ஆர்தர் கூறினாலும், விரைவில் இன்னும் 2 பெண்களை திருமணம் செய்து, மனைவிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த விரும்புகிறார். அவர் மேலும் கூறியதாவது: என் ஒவ்வொரு மனைவியுடனும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

பேட்டா பைட் என்றால் என்னவென்று தெரியுமா

கணினி யுகம் வளர வளர அதன் பயன்பாடுகளும் கற்பனைக்கெட்டாத அளவுக்கு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் 3 அல்லது 3 எம்பி கொண்ட பிளாப்பி டிஸ்க் சேமிப்பகமே மிகப் பெரியதாக கருதப்பட்டது. காலப் போக்கில் 1 ஜிபி வந்து தற்போது டெர்ரா பைட் அளவுக்கு சேமிப்பகங்களும், ஹார்ட் டிரைவ்களும் வந்து சந்தையை கலக்கி வருகின்றன. 1 ஜிபி என்பது 1024 எம்பி. அதேபோல 1 டெர்ரா பைட் என்பது 1024 ஜிபி. அதேபோல தற்போது புதிதாக வந்துள்ள பேட்டா பைட் என்பது 1 பிபி அதாவது ஒரு பேட்டா பைட் என்பது 1024 ஜிபிக்கு இணையானது. இதன் அளவை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் 13.3 ஆண்டுகள் ஓடக் கூடிய உயர்தர ஹெச்டி வீடியோக்களை இதில் சேமிக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள வேறு ஒரு வழியும் உள்ளது. அதாவது வரலாறு தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் மனிதனால் அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் 50 பிபி டிரைவில் அடக்கி விடலாம் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது மனித வரலாறு என்பது 50 பிபி. அம்மாடியோவ்.

நீரில் இயங்கும் கணிணியை உருவாக்கிய ரஷ்யா

டிரான்சிஸ்டர்கள் எனப்படும் சிறிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரையிலும் கணிணியானது இயங்குவதற்கு பற்சக்கரங்கள், பிவோட்கள், நெம்புகோல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இவற்றை இயக்குவற்கு என தனியாக ஆற்றலும் தேவைப்பட்டது. இந்த சூழலில் 1936 இல் விளாடிமிர் லுகியானோவ் என்பவர் நீரை பயன்படுத்தி சில கணித முறைகளுக்கு தீர்வு காணக் கூடிய கணினியை உருவாக்கினார். இவற்றை கட்டிடங்களில் ஏற்படும் விரிசலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இது வழக்கொழிந்தது. தற்போது இந்த நீர் கணினி மாஸ்கோவில் உள்ள பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.