முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் படைகளை குவிக்கும் சீனாவுக்கு பதிலடி: லடாக் எல்லையில் பீரங்கிகளை நிறுத்தியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லடாக் எல்லையில் சீன ராணுவம் மீண்டும் படைகளை குவிக்கத் தொடங்கி இருப்பதால், அதற்கு பதிலடி கொடுக்க இந்தியாவும் தயார்நிலையில் உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய அதிநவீன கே-9  வஜ்ரா ரக பீரங்கிப் படைகளை நிறுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்தாண்டு படைகளை குவித்தது. இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் தடுத்த போது, இருதரப்பு ராணுவத்துக்கும் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்திய வீரர்களின் தாக்குதலில் 40 சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக  தகவல் வெளியான போதிலும், 5 வீரர்கள் மட்டுமே இறந்ததாக சீன ராணுவம் தெரிவித்தது. இந்த மோதலை தொடர்ந்து, 2 நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால், போர் பதற்றம் உருவானது. பின்னர், இருநாட்டு ராணுவமும் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக பாங்காங் திசோ ஏரி பகுதியில் நிறுத்தப்பட்ட படைகளை சீனா திரும்பப் பெற்றது. அதேபோல், அப்பகுதியில் இருந்த இந்திய படைகளும் திரும்ப  பெறப்பட்டன. மற்ற இடங்களில் நிறுத்தப்பட்ட படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக ஏற்கனவே 12 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

விரைவில் 13-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், லடாக்கின் கிழக்கு, வடக்கு எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து,  இந்த  எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீர்  ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘லடாக்கில் கிழக்கு, வடக்கு எல்லைகளில்  சீன ராணுவம் படைகளை குவிப்பது கவலை அளிக்கிறது. சீனப்படைகளின் நடமாட்டத்தையும், , ஆப்கானிஸ்தான் நிலையையும்  தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்  பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்,” என்றார்.

இந்நிலையில், , தானியங்கி முறையில் இயங்கக் கூடிய அதிநவீன கே-9 வஜ்ரா பீரங்கி படைகளை, லடாக் எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தியது. இவை 50 கிமீ தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. இதனால்,  இந்திய - சீன எல்லையில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்த பீரங்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரலில் சர்ச்சுகளில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 300 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய ராணுவத்துடன் இணைந்து இலங்கை ராணுவம் செயல்பட்டு வருகிறது. இருநாட்டு ராணுவமும், ‘மித்ர சக்தி’ என்ற பெயரில் கூட்டு போர் பயிற்சியை செய்து வருகின்றன. இதன் 8-ம் கட்ட போர் பயிற்சி, இலங்கையின் அம்பாராவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில், இன்று முதல் 15ம் தேதி வரையில் 12 நாட்கள் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து