முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காதலர்களின் அழகிய சுரங்கப் பாதை

காதலர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது கண்டு ரசிக்க வேண்டிய அழகிய, அதிசய சுரங்கப் பாதை எங்குள்ளது தெரியுமா...உக்ரைன் நாடு. ரஷ்யாவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டி நாடு. நாடுதான் குட்டி, ஆனால் ஐரோப்பாவிலேயே அதிகமான அழகிய கட்டிடங்கள், சுற்றுலா தளங்கள், சாகச விளையாட்டு தளங்கள், பாரம்பரிய சந்தைகள் என பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான 2 ஆவது மிகப் பெரிய நாடாகும். இங்குதான் இயற்கை எழில் கொஞ்சும் காதலர் பசுமை சுரங்கப்பாதை அமைந்துள்ளது. சுமார் 3 கிமீ நீளம் கொண்ட இந்த பாதை ஒரு கைவிடப்பட்ட ரயில் தடமாகும். ஒரு காலத்தில் அருகில் உள்ள மர ஆலையிலிருந்து தினமும் மரங்களை சுமந்து கொண்டு ரயில் இந்த தடத்தில் சென்று வந்துள்ளது. தற்போது இந்த தண்டவாளத்தை பசுமை போர்த்திய சுரங்கம் போல இயற்கை அற்புதமானதாக மாற்றியுள்ளது. உலகில் உள்ள காதலர்கள் எல்லாம் இதை நோக்கி தினம் தினம் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்.அத்தனை அற்புதமான இடமாகும். இதில் நடந்து செல்வதே மிகவும் பரவசமளிக்கும் அனுபவமாக அமையும். அந்நாட்டில் உள்ள Kleven நகரில் கார்பெந்தியன் மலைத் தொடர் காடுகளுக்கு மத்தியில் இந்த வழித்தடம் அமைந்துள்ளது.

எறும்புகளின் மொத்த எடை மனிதனை விட அதிகம் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு சின்ன எறும்புதானே என எதையும் அலட்சியமாக கருதக் கூடாது. உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்பது நமது முன்னோர் வாக்கு. அப்படி பார்த்தால் மிக சிறிய உயிரினங்களான எறும்புகள், மிகப் பெரிய மனிதர்களை காட்டிலும் பூமி பந்தில் அதிகம் வாழ்கின்றன. பூமியில் சுமார் 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார் என்றால், எறும்புகளின் எண்ணிக்கையோ 100 டிரில்லியனுக்கும் அதிகம். உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடையையும் கணக்கிட்டால் மனிதர்களின் மொத்த எடையை காட்டிலும் அதிகமாக இருக்கும். 

எறும்பை விட மிகச்சிறிய பறக்கும் ரோபோ கண்டுபிடிப்பு

காற்று மாசை அறிவதற்காக உலகிலேயே மிகச் சிறிய பறக்கும் ரோபோவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன் அளவு எறும்பை காட்டிலும் சிறியது என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசை கண்டறிவதற்காக இந்த குட்டி ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் நீண்ட முயற்சிக்குப் பிறகு தற்போது சிறிய அளவிலான பறக்கும் ரோபோவை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் எறும்பை விட சிறியதாக இருக்கும் அந்த ரோபோ காற்று மாசை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் கண்டுபிடித்த பறக்கும் கருவிகளிலேயே இதுதான் மிகச் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

இயற்கையின் அதிசயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சிசிபு நகர் அருங்காட்சியகத்தில் மனித முகங்களுடன் கூடிய பாறைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அந்த பாறைகளில் மனித முகங்கள் செயற்கையாக செதுக்கப்படவில்லை. இயற்கையாகவே உருவான மனித முக பாறைகள் சேகரித்து அங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கண்காட்சியில் 1700 மனித முக பாறைகள் உள்ளன. சில முகங்கள் அழுத நிலையிலும், சிரித்த நிலையிலும் உள்ளன. சில பாறைகள் வாயை பிளந்த நிலையிலும், மற்றவை சிந்தனை மற்றும் கவலையில் ஆழ்ந்த நிலையிலும் இருப்பது போன்று உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இவ்வகை பாறைகள்  சேகரிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!