முக்கிய செய்திகள்
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தண்ணீர் பற்றாக்குறையால்....

ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்ளும். அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளது.

மரக்கிளையில் வீடுகள்

மரக்கிளையில் பறவைகள்தான் கூடு கட்டும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பறவைகள் மத்தியில் மரக்கிளையில் வீடுகள் கட்டினால் எப்படி இருக்கும்.  அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வடக்கு கர்நாடாகா. அங்கே தண்டேலி என்பது கோவா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகாவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு வெப்பமண்டல மழைக்காடு ஆகும். இங்கு  தரையில் இருந்து 40 அடி உயரத்தில் ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் அமைந்துள்ளது. இது ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரிசார்ட் ஆகும். இது தண்டேலியின் கணேஷ்குடி பகுதியில் காளி நதி மற்றும் தடிமனான காடுகளுக்கு நடுவே அடர்ந்த மரங்களில் கிளைகளுக்கு மத்தியில் கனமான மூங்கில்களால் கட்டப்பட்ட குடிசை பாணியில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் தேனிலவுக்கு வரும் தம்பதிகளுக்கு ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் ஒரு சொர்க்கமான இடமாக திகழ்கிறது. என்ன தண்டேலிக்கு செல்ல ரெடியா...

சிறந்த நகரம்

உலகளவில், சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வில் ஆஸ்ட்ரிய தலைநகர் வியன்னா சிறந்த நகராக தேர்வாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து, ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கூர் நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மோசமான சூழல் உள்ள நகரமாக பாக்தாத் உள்ளது. ஆசியாவின் சிறந்த நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூருக்கு முதலிடம்.

புதிய முயற்சி

உலகின் மிகப்பெரிய பதிப்பக நிறுவனமான ஹார்ப்பர் கோலின்ஸ், தனது இந்திய கிளைகளில் பணியாற்றுபவர்களுக்கு, செல்லப்பிராணிகளை பராமரிப்பதற்காக, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை (ஐந்து நாட்கள்) அனுமதித்துள்ளது. மேலும், நொய்டாவில் உள்ள அலுவலகத்தில் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

படிப்புக்கு செலவு

உலகம் முழுவதிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் படிப்புகாக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த 8 ஆயிரத்து 481 பெற்றோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவுக்கு 13-வது இடமும், இவர்கள் ஒரு குழந்தையின் படிப்புக்காக தொடக்க கல்வி முதல் இளநிலை பட்டப்படிப்பு வரை சுமார் ரூ.12 லட்சத்து 35 செலவிடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

ஹேர்கட்டில் அசத்தலான உருவங்கள் பஞ்சாப் சகோதர்கள் அசத்தல்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதே போல கலைக் கண்ணோடு பார்த்தால் எந்த பொருளையும் தங்களுடைய படைப்பாற்றலால் மேஜிக் போல மாற்றி விடும் வித்தை படைத்தவர்கள் படைப்பாளிகள். அப்படித்தான் பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் கலைஞர்கள் தனது அசத்தலான முடி வெட்டுதல் மூலம் சிறப்பான உருவங்களை உருவாக்கி அசத்துகின்றனர். அவர்களது கைவண்ணத்தில் வாடிக்கையாளர்களின் தலையே கேன்வாசாக, தலையில் மைக்கேல் ஜாக்சன், மிக்கி மவுஸ் என விதவிதமான உருவங்கள் ஜொலிக்கின்றன. பஞ்சாபில் உள்ள சிகை திருத்தும் தொழில் செய்து வரும் சகோதரர்களான Dabwali என்ற பகுதியைச் சேர்ந்த Rajwinder Singh Sidhu மற்றும் Gurwinder Singh Sidhu ஆகியோர்தான் இந்த சாதனையை படைத்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு உருவங்களை ஹேர்கட் மூலம் செய்து தருகிறோம் என்கின்றனர் ஸ்டைலாக அவர்கள் தங்களது கேசத்தை ஒதுக்கியபடி. 

ரயிலை தூக்கிச்செல்லும் விமானம் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியம்

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும்.  ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும்.

அடிக்கடி தக்காளி ...

தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும். மேலும், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். கிட்னி தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.

சாதனைப் பெண்

இத்தாலியில் லோ ஷோ டி ரிகார்டு  என்ற உலகசாதனைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சர்க்கஸ் பெண் எல்லிஸ், 35 வாட்ஸ் திறன் கொண்ட ஓடும் 2 ஃபேன்களின் இறக்கைகளை தன் நாக்கை வைத்து நிறுத்தி அசத்தினார். இது போன்று அவர் தொடர்ந்து 16 முறை 2 ஃபேன்களின் இறக்கைகளை நிறுத்தி சாதனை படைத்துள்ளார்.

முகத்தை பராமரிக்க

ஒரு நாளைக்கு 2 முறை மட்டும் முகத்திற்கு சோப்பு போட்டு குளித்தால் நல்லது. இல்லையெனில், தோலில் வறட்சி ஏற்படும். மேலும், சூடாகவோஅல்லது அதிக குளிரான நீரைக்கொண்டு முகத்தை கழுவுவதால் முகப்பொலிவு ஏற்படாது. முகம் கழுவுவதற்கு முன்னால் நம் கைகளும், முகத்தை துடைக்க பயன்படுத்தும் துண்டையும் சுத்தமானதாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கழுதைகளை காணவில்லை

இன்றைய தலைமுறையினரில் பலர், கழுதைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பைக்கூட பெற்றிருக்க மாட்டார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கழுதை வீட்டு விலங்காக இருந்தது. கழுதை தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று.  40 ஆண்டுகள் வரைகூட கழுதைகள் உயிர் வாழும். கழுதைகள் தற்போது வெகுவாக அருகி வருகின்றன. 2007 - 2012 காலகட்டத்தில் இந்தியாவில் கழுதைகளின் எண்ணிக்கை 23% வீழ்ச்சி அடைந்தது. 2012 - 2019 ஆண்டுகளில் அது மேலும் 61.23% வீழ்ந்து, இப்போது வெறும் 1,20,000 கழுதைகள் மட்டுமே உள்ளன. இது உலகளாவிய போக்காக உள்ளது. சீனாவில் 1992-இல் ஒரு கோடியே பத்து லட்சம் கழுதைகள் இருந்தன; இப்போது வெறும் 26 லட்சமாகச் சுருங்கி விட்டன.

ஐஸ் வாட்டர்

நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் ஜில் தண்ணீரையே பருகுகின்றனர். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் செரிமானம் ஆவதில் பிரச்சனை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: