முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு : ராஜ்யசபை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ராஜ்யசபையில் அரசு மானியங்களை பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை மூன்று முறை ஒத்திவைக்க நேரிட்டது. எல்.பி.ஜி. சமையல் எரிவாயு, ஓய்வூதியம் பெறுவதில் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காலையில் அவையில் இப்பிரச்சனை எழுந்ததால் 12 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது, பின்னர் 15 நிமிடமும், மீண்டும் அமளி நீடித்ததால் 2 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. 

ராஜ்யசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரி, இப்பிரச்சனையை எடுத்துக் கொள்ளக்கோரி திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகரால் இந்த நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளும் இக்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டது.  இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கையில் தனிப்பட்ட அடையாள எண் அல்லது ஆதார் அடையாள அட்டை மக்களுக்கு வழங்கப்படுகிறது, அரசு சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டமையால் அவையை மூன்று முறை ஒத்திவைக்க நேரிட்டது.

சமாஜ்வாடி கட்சியின் எம்.பி. ராம் கோபால் யாதவ் பேசுகையில், ஆதார் அடையாள அட்டை பெறாதவர்களின் ரேஷன் கார்டு, ஓய்வூதியம் மற்றும் எல்.பி.ஜி. சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்யுங்கள் என்று மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது என்றார். சுமார் 40 சதவித மக்கள் ஆதார் அடையாள அட்டை பெறவில்லை. இந்நடவடிக்கை ஏழை மக்களை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒபிரையன் பேசுகையில் மத்திய அரசு கார்ப்ரேட் நிறுவனங்களுடன் பேசுகிறது, ஆனால் மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்வது கிடையாது. ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்குவது நாடு முழுவதும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

பிஜு ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் திர்கி பேசுகையில் ஒடிசாவில் 20 சதவித மக்கள் ஆதார் அடையாள அட்டை பெறவில்லை, மத்திய அரசு வழங்கிஉள்ள அறிவுரையானது ஏழை மக்களுக்கு பிரச்சனையை தான் உருவாக்கும் என்றார்.  மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பதில் அளிக்கையில், பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, அனைத்து சலுகைகளும் ஆதார் கார்டு வழியாகவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  உறுப்பினர்கள் எழுப்பிய கவலையை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம், “இது (ஆதார் அடையாள அட்டை) கட்டாயம் கிடையாது.

தேவைப்பட்டால், தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். நேரடி மானிய திட்டத்தின்படி அரசின் மானியம் நேரடியாக பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது.  இப்போது ஊழல், தரகர்கள் மற்றும் முறைக்கேட்டை தவிர்க்க நேரடி மானிய திட்டம் அவசியமானது. ஒட்டுமொத்த மக்களும் அடையாள அட்டையை பெரும் வரையில் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்படாது. இவ்விவகாரத்தில் தேவையான விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்று உறுதி அளிக்கிறேன்,” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்