சென்னை : மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கட்சி செலவுக்காக டி.வி. மற்றும் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது.
19-ந்தேதி நடக்க இருக்கும் 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிடுகிறார்.
அரசியலுக்குள் நுழையும்போதே சினிமாவில் நடிப்பதை விட மாட்டேன் என்று உறுதியாக கூறினார். அரசியல் என்பது தொழில் அல்ல. சினிமா தான் தொழில். வருமானத்துக்காக தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.
பின்னர் அரசியலுக்காக நடிப்பை தியாகம் செய்யவும் தயார் என்றும் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ள இந்தியன் 2 படமே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் கூறினார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் தேர்தலில் கமல் பிசியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கமலுக்காக படக்குழு காத்திருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் புதிய பரிமாணத்தில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி என்று முதல் சீசன் நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதில் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து சீசன் 2 ஆரம்பித்தது. இந்த முறை கமல் முழு அரசியல்வாதியாகி இருந்தார்.
இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மகத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கவர்ச்சியும் கணவன் மனைவியான தாடி பாலாஜி-நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 2 சீசன்களின் வெற்றிக்கு பிறகு தற்போது பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிவிட்டது. மூன்றாவது சீசனுக்கான புரோமோ படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளது.பூந்தமல்லி தனியார் படப்பிடிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக்பாஸ் வீட்டை ஒட்டிய செட்டில் கமல்ஹாசன் கலந்து கொண்ட காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாட்களில் புரோமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாம் எனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. எனவே அடுத்த 4 மாதங்களுக்கு கமல் இந்த படப்பிடிப்பில் பிசியாகி விடுவார் என்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் அல்லாது கமல் நடிப்பில் தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. இந்த படத்தை கமல் கட்சியின் துணைத்தலைவரான மகேந்திரன் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்